அரங்கம் அதிர்ந்த டாம் க்ரூஸ் திரைப்பட திரையிடல்

பிரான்ஸ் நகரில் 75 ஆவது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டண்ட் காட்சிகளுக்குப் பெயர்போன பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்க்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் மரியாதை செய்யப்பட்டு “பால்ம் டிஓர்“ விருதும் வழங்கப்பட்டுள்ள காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸ் ஏற்கனவே ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பிரிட்டிஷ் அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். இவருடைய ஸ்டண்ட் காட்சிகளுக்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் “டாப் கன்டாப் கன்: மேவெரிக்“ படத்திற்காக இவருக்கு கேன்ஸ் திரைப்படக் குழு வழங்கும் “பால்ம் டிஓர்” விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறது.

35 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மேவெரிக் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தில் டாம் குரூஸ், பீட் மேவெரிக் மிட்செல் எனும் பெயரில் மூத்த டெஸ்ட் பைலட்டாக நடித்துள்ளார். இவருடைய சாகசமான நடிப்பை பார்த்து கேன்ஸ் விழாக்குழு பாராட்டிய நிலையில் மிக உயரிய விருதான பால்ம் டிஆர் விருதும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டு இருக்கிறது.

 

இந்த விருதை வழங்கும்போது யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் கேன்ஸ் விழா சார்பாக வானத்தில் 6 போர் விமானங்கள் பறக்க விடப்பட்டது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் தொடர்ந்து கரவொலியை எழுப்பினர். இதனால் நடிகர் டாம் குரூஸ் கண்ணீர் சிந்தி தனக்கு வழங்கப்பட்ட விருதைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் விழா மேடையில் பேசிய அவர், பாராமவுண்ட் மக்களுக்கு நன்றி. இப்படி உங்கள் முன்னால் நிற்பது எனது நீண்டநாள் கனவு. இந்த மாலை நேரத்தை வாழ்வில் என்னால் மறக்கவே முடியாது என்றும் நெகிழ்ச்சிப் பொங்க பேசினார்.