இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை! ‘டீன்ஸ்’ பட இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இமான்!

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

இந்த நிகழ்வில்,

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…

“புதுமைகளின் பிறப்பிடம் பார்த்திபன் சார். அவர் என்ன செய்தாலும் வித்தியாசமாக இருக்கும். அதிலும் ‘டீன்ஸ்’ திரைப்படம் மிகவும் புதிதாக உள்ளது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.”

நடிகர் யோகி பாபு பேசியதாவது…

“பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக ‘டீன்ஸ்’ படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன், நன்றி.”

இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது…

“நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் ‘டீன்ஸ்’ படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை. எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி.”

இசையமைப்பாளர் D. இமான் பேசியதாவது…

“இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம். முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”