ஊடகங்களின் ஆதரவு இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும்! “வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் விநாயக் துரை பேசியதாவது…
வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV குமார் சாரைப் பார்த்துள்ளேன், அவர் எங்கள் படத்தை வாழ்த்த வந்தது மகிழ்ச்சி. கேபிள் சங்கர் சார் இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். தனஞ்செயன் சாரை அணுக காரணமாக இருந்த கேபிள் சங்கர் சாருக்கு நன்றி. இது ஹைபர் லிங் கதைக்களம். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி எல்லாம் ஓகே ஆகியிருந்த நிலையில், அவர் எனக்கு செக் சைன் பண்ணும்போது பாம்பு வந்தது, அந்த தயாரிப்பாளர் அப்படியே போய் விட்டார். அப்போது என் அப்பா வந்தார். அவரிடம் அப்பா ஃபிரண்டோடு பிஸினஸ் செய்யப்போகிறேன் என சொல்லி அவரிடம் காசு வாங்கித் தான் இந்தப்படம் எடுத்தேன். 3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தார், இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை. தனஞ்செயன் சார் நம் படத்தை பாராட்டி விட்டார் என்றேன் அவரை எப்படி ஏமாற்றினாய் அவரைப்பார்த்தால் ஏமாறுகிற மாதிரி தெரியலையே என்றார். இன்று இந்த பிரஸ் மீட்டைக் காட்டி அவர்களை நம்பவைப்பேன். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் வல்லவன் வகுத்ததடா படத்தின் மையம். பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது தான் படம்.

நடிகை ஸ்வாதி பேசியதாவது…
ஆக்டிங் ஸ்கூல் படிக்கும்போதே நடிக்கும் ஆர்வம் இருந்தது ஆனால் அது முடியவில்லை. ஆனால் நடிப்பின் மீதான ஆர்வத்தில் சின்ன சின்ன போட்டோஷூட், மாடலிங் எல்லாம் செய்தேன். ஆனால் முதல் பட வாய்ப்பே, மெயின் லீடாக கிடைக்கும் என நினைக்கவில்லை. கார்த்திக் சாருக்கு நன்றி. இந்தப்படத்தில், இந்த டீமிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். எல்லோரும் கடினமாக உழைத்துத் தான் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் இந்தப்படம் வெற்றியைத் தர வேண்டுகிறேன். தனஞ்செயன் சாருக்கு என் நன்றிகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது…
படத்தின் 8 நிமிட கட் அட்டகாசமாக இருந்தது, எனக்கு இந்த மாதிரி இண்டிபெண்டண்ட் படங்கள் ரொம்பப் பிடிக்கும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் அப்படி வந்தவர்கள் தான். ஆனால் அதை எப்படி பிரசண்ட் செய்கிறோம் என்பது தான் முக்கியம். இப்பபடத்தின் பிரசண்ட் எல்லாம் நன்றாக உள்ளது. தயாரிப்பாளரின் அப்பா அவரிடம், தனஞ்செயன் சாரை ஏமாற்றி விட்டாயா எனக் கேட்டதாகச் சொன்னார். தனஞ்செயன் சார் ஏமாற மாட்டார் அவருக்கு திரைத்துறை அறிவு அதிகம். இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
சிறு தயாரிப்பு படங்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமென்பதே என் நோக்கம் என்னால் முடிந்தவரைத் தினமும் படங்கள் பார்த்து வருகிறேன் பல படங்களை எங்கள் நிறுவனம் மூலம் ஓடிடியில் விற்றுத் தந்தோம். எறும்பு முதலாகப் பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் தான் கேபிள் சங்கர் சொல்லி இந்தப்படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. விநாயக் துரை மிக அழகாகத் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் நடித்துள்ள ராஜேஷ் ஹைனாவின் வித்தியாசமான குணங்களோடு நடித்திருந்தார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார்கள். நாயகி தமிழில் பேசி நடித்திருப்பது அருமை. வல்லவன் வகுத்ததடா தனித்துவமான படம். இது புதியவர்களின் முயற்சி, ஊடகங்களின் ஆதரவு வேண்டும் அது இருந்தால் தான் ஓடிடி பிஸினஸ் செய்ய முடியும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இப்படத்திற்குச் செய்து வருகிறோம். உங்கள் கடமையாக நினைத்து இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.