‘இங்கு கரப்சனும் இருக்கும். அடாவடித்தனமும் இருக்கும். எதுவும் மாறாது’! ‘ஒரு நொடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேசியதாவது!

 

இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌

இந்த நிகழ்வில்,

படத்தின் இயக்குநர் மணிவர்மன் பேசியதாவது,

” எங்களுடைய ஒரு நொடி திரைப்படத்திற்காக பல நொடிகளை செலவு செய்து இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது போல்.. படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியிருக்கும் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் வாய்ப்புகளைத் தேடி அலையும் போது நம்மை மற்றவர்கள் பார்க்கும் பார்வை வேறாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர் அழகர் என்னை நம்பி இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. டைட்டில் சாங்.. அப்பா – பொண்ணு இடையிலான சாங்.. ஒரு லவ் சாங்… என மூன்று பாடல்கள் இருக்கிறது. மூன்று பாடல்களையும் பாடலாசிரியர்கள் உதயா அன்பழகன், ரவிசங்கர், ஜெகன் கவிராஜ் என மூன்று பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த மூன்று பாடல்களையும் சூப்பர் சிங்கர் சத்ய பிரகாஷ், என்னுடைய நண்பர் வருண் சந்திரசேகரன் மற்றும் நான் பாடல்களை பாடி இருக்கிறோம். என்னுடைய கல்லூரியில் உள்ள இசைக்குழுவினரை அழைத்து வந்து, படத்திற்காக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். ” என்றார்.

நடிகர் ஆரி அர்ஜுனன் பேசியதாவது,

” இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் மட்டும் தான் போட்டி. படத்தைப் பற்றி அனைவரும் அனைத்து விசயங்களையும் பேசி விட்டனர். நாளைக்கு தேர்தல் என்பதால்.. பேச்சாளர் பழ. கருப்பையா பேசும்போது, ‘இங்கு கரப்சனும் இருக்கும். அடாவடித்தனமும் இருக்கும். எதுவும் மாறாது’ என்பதை சொல்லியிருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மாற்றம் ஏற்படும் என்பது தான். ஓட்டு போட்டால் மாற்றம் வரும் என்று நம்பி தான் ஓட்டு போடுகிறோம்.

ஆரியின் பேச்சை கவனித்தபோது அவர் எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கிறேன். அவருடைய பேச்சில் .. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வழங்கிய ஆலோசனை.. மிகவும் சிறப்பானது.  அவரது ஆலோசனையை ஏற்று வாக்களித்ததற்கான டிஜிட்டல் சான்றிதழ் உடனடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டால் பெரும் மாற்றம் ஏற்படும். இதற்காக ஆரியை மனமார வாழ்த்துகிறேன். அதிலும் மாற்றத்திற்காக அவர் கொடுக்கும் குரல்‌ பெரிய அளவில் பேசப்படும்.‌ தனி மனிதனாக இந்த சமூகத்தில் மேலும் பல உயரங்களை தொடுவீர்கள் என வாழ்த்துகிறேன். ” என்றார்.