ஓடிடி தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த மாமன்னன் திரைப்படம்!

 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல்,  விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது.

தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK வின் எடிட்டிங், மனதை உருக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை என இப்படம் ஒரு மிகச்சிறந்த உலக சினிமா அனுபவத்தைத் தந்தது.

திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட நிலையில் இப்படம் ஜூலை 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. வெளியான வேகத்தில், இந்திய அளவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. இந்தியா முழுக்க ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்திய மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், உலகளவிலான டாப் பத்து படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும் அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து, இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடி டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது “மாமன்னன்” திரைப்படம்