Press Meet Stills and Director Cheran’s Letter To Tamil Film Producers Council President Vishal


04/12/2017
பெறுநர்
தலைவர் அவர்கள்
தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம்
சென்னை

பொருள்: தலைவர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்வது சம்பந்தமாக

வணக்கம்,
தமிழ்திரைப்படத்தயாரிப்பாளர்களின் தலைவராகிய விசால் அவர்களுக்கு,

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த்திரைப்பட சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் 2.12.2017 அன்று ஊடகங்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளீர்கள். அந்த செய்தி நீங்கள் RK NAGAR இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்கப்போவதாகவும் , இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். இந்த அறிவிப்பு தயாரிப்பாளராகிய எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது..
அந்த அதிர்ச்சிக்கு காரணம் நீங்கள் அரசியலில் புகுவதோ RK NAGAR வேட்பாளராக நிற்பதோ அல்ல.. 1230 உறுப்பினர்களை கொண்ட வருடத்திற்கு 500 கோடி முதலீடு செய்யும் தொழிலாகிய தமிழ்த்திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் நீங்கள் துளிகூட தயாரிப்பாளர்களின் ப்ரச்னையையோ, அவர்களின் எதிர்காலத்தையோ நினைக்காமல் சிறுபிள்ளைத்தனமாக RK Nagarல் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருப்பது ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் , உங்களை மட்டுமே உயர்த்திக்கொள்ள இந்த சங்கத்தின் தலைவர் பதவியை பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என தெரிகிறது..
தயாரிப்பாளர் சங்கம் என்பதும் தயாரிப்பாளர்களும் என்றுமே எந்த அரசாங்கம் பதவிக்கு வருகிறதோ அதைச்சார்ந்தே இயங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை மறுக்கமுடியாது.. ஏனெனில் திரைத்துறைக்கான மானியங்களாகட்டும், வரிச்சலுகை வரிக்குறைப்பாகட்டும், டிக்கெட் விலை நிர்ணயிக்க அனுமதியாகட்டும், திரைத்துறையின் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் பைரசி, திருட்டு DVDs, Online Piracy, திருட்டுத்தனமாக Cable TV ஒளிபரப்பு போன்ற அனைத்துக்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு சார்ந்தே இயங்கவேண்டிய கட்டாயம்.
அப்படியிருக்க தாங்கள் அவ்வப்போது அரசியல்வாதிகளை, அமைச்சர்களை மிரட்டும் தொனியில் ஊடகங்களில் பேசுவதும், அரசியலில் குதிக்கப்போவதாக கொடுக்கும் அறிவிப்புகள், இப்போது சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவிப்பு ஆகியவையெல்லாம் அனைத்து கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகும்.. எதிர்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கும் சங்கத்துக்கும் எவ்விதமான ஒத்துழைப்பும் கொடுக்கமுடியாத, மறுக்கும் சூழலை உருவாக்கும்.. இதனால் நமது தயாரிப்பாளர்கள் நிலை மட்டுமல்லாமல் நமது திரையுலகமே ஒட்டுமொத்தமாக முடங்கும், அழியும் நிலைக்கு தள்ளப்படும்.
தமிழ்த்திரையுலகம் என்பது வெறும் 1230 தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல.. அந்த தயாரிப்பளர்களை நம்பி இருக்கும் 24 சங்கங்களின் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள் வரை சுமார் 10லட்சம் பேரின் வாழ்க்கை இதில் அடங்கியுள்ளது என்பது உண்மை. இது உங்கள் கவனத்திற்கு வராமல் போனது எப்படி எனத்தெரியவில்லை..
மேலும் நீங்கள் இதுவரை அதாவது தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆன 8 மாதகாலத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே செய்து முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சூழலில் நீங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் சங்கத்தின் வேலைகளை கவனம் செலுத்தமுடியாது..
எனவே தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனை கருத்தில்கொண்டும் உங்கள் இயலாமையை கருத்தில் கொண்டும் தயவுசெய்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என அனைத்து தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.. இதற்கு நீங்கள் உடனடியாக முடிவு எடுக்கவில்லையெனில் உங்கள்மீது அத்துனை தயாரிப்பாளர்கள் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்பதை தெரிவிக்கிறோம்..
நன்றி

இவண்
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள்