17 வருடங்கள் கழித்து முழுநீள திரைப்படத்தை இயக்கும் நடிகை ரேவதி

 

‘தி லாஸ்ட் ஹுர்ரா’ என பெயரிடப்பட்ட திரைப்படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார், அதில் கஜோல் ஹீரோயினாக நடிக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கபடுகிறது. இந்தப் படம், சுஜாதா என்கிற தாயின் போராட்டங்களை, அவள் எப்படி புன்னகையுடன் எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லும் படமாக இருக்கும் என படக்குழு கூறியுள்ளனர்.

சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால் இணைந்து பிலைவ் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகை ரேவதி 2002-ம் ஆண்டு இயக்கிய ’மித்ர மை ஃப்ரெண்ட்’ திரைப்படம் தேசிய விருது வாங்கியது. 2004-ம் ஆண்டு இயக்கிய ’ஃபிர் மிலேங்கே’ திரைப்படமும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இப்போ இந்த சுஜாதா கதாபாத்திரத்தில் நடிக்க கஜோலே சரியான தேர்வாக இருப்பார் என்று ரேவதி கூறியுள்ளார். “தி லாஸ்ட் ஹுர்ராவில் சுஜாதாவின் பயணம் என் இதயத்துக்கு நெருக்கமானது. என்னால் புரிந்து கொள்ள முடிவதோடு, எனக்கு உத்வேகத்தையும் தரக்கூடியது. நானும் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்த போது கஜோல் தான் எங்கள் மனசில் முதலில் வந்தார். அவளது மென்மையான, துடிப்பான கண்களும், அழகான புன்னகையும், எதுவும் சாத்தியம் என்று உங்களை நம்பவைக்கும். அதுதான் சுஜாதா கதாபாத்திரமும் அப்படிபட்டது தான். இந்த கூட்டணியில், கஜோலுடன் ஒரு மனதைத் தொடும் கதையைச் சொல்வதில் ஆர்வமாக இருக்கிறேன்” என ரேவதி கூறியுள்ளார்.

இந்த அழகிய பயணம் அனைவருக்கும் பகிரப்பட வேண்டிய ஒன்று என்றும், ரேவதி படத்தை இயக்குவது தனக்கு அதிக நம்பிக்கையைத் தருவதாகவும் கஜோல் கூறியுள்ளார்.