Boomerang Audio Launch Stills

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை வாழ்த்தினார்.

கண்ணன் மணிரத்னம் என்ற பள்ளியில் இருந்து வந்தவர், நன்கு கலையை கற்றவர். அவரே சொந்தமாக தயாரித்து இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரை வைத்து கூடிய விரைவில் ஒரு படம் தயாரிப்பேன் என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

நான் அறிமுகப்படுத்திய இரண்டு பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள். முரளி வீட்டுக்கு போகும்போது அதர்வா சின்ன வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஒரு கதை சொன்னபோது, அவர் தான் அதர்வாவை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அப்படி உருவான படம் தான் பாணா காத்தாடி. ஒவ்வொரு படத்திலும் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். இயக்குனர் கண்ணன் முதலில் மனோபாலாவிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தார். அந்த நேரத்திலேயே நல்ல திறமைசாலி. அதன் பிறகு மணிரத்னம் சாரிடம் வேலை பார்த்தார். பின் தன்னம்பிக்கையோடு என்னிடம் வந்து ஒரு கதை சொல்லி, நான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என விரும்பினார். என் பேனரில் அவர் அறிமுகமானது மகிழ்ச்சி. அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்றார் சத்யஜோதி தியாகராஜன்.

கடந்த ஆண்டு இவன் தந்திரன் படத்தை நானும், கண்ணனும் சேர்ந்து தயாரித்திருந்தோம். பெரிய வெற்றி பெற வேண்டிய படம், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தின் வெற்றி கை நழுவி போனது. ஒரு சில மாதங்கள் நாங்கள் கஷ்டத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் அதர்வா கொடுத்த வாய்ப்பு தான் இந்த பூமராங். இயக்குனருக்கு நடிகர்களின் ஆதரவு மிக முக்கியமானது. சரியான காலகட்டத்தில் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

மூன்றாம் பிறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூர் போனபோது, சத்யஜோதி தியாகராஜன் சாரை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மேடையில் ஞாபகம் வருகிறது.திட்டமிட்ட படி, நேர்த்தியான முறையில் படப்பிடிப்பு நடக்கும். மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கமல் உடனும், அடுத்த 30 ஆண்டுகள் மணிரத்னம் உடனும் கழித்திருக்கிறேன். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. இன்றும் கமல் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்து வருகிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி என்றார் சுஹாசினி மணிரத்னம்.

நானும் கண்ணனும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தான் மணி சாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தோம். அப்போது நான் தான் சீனியர் என கண்ணன் சொல்வார், ஆனால் அது தான் உண்மையாகி இருக்கிறது. எனக்கு முன்பே படம் இயக்கினார், நான் இயக்குனராகும் போது அவர் அடுத்த கட்டமாக தயாரிப்பாகி இருக்கிறார், அவரின் உண்மையாம உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார் இயக்குனர் மிலிந்த் ராவ்.

கண்ணன் என் நண்பன், உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது. கடந்த படத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போனது, அது இந்த படத்தில் கிடைக்க வேண்டும் என்றார் இயக்குனர் சமுத்திரகனி.

கண்ணன் ரொம்ப ஷார்ப். எல்லாத்துலயும் ரொம்ப ஃபஸ்ட். மேகி கண்ணன் என்று அவரை சொல்லலாம். நான் 15 படத்தில் நடித்து வருகிறேன், அதில் கொஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் இருந்த ஹீரோ அதர்வா தான். கண்ணன், நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பது தான் முக்கியம், நினைத்ததை தயங்காமல் செய்யுங்கள் என்றார் நடிகர் ரவி மரியா.

கண்ணன் சார் இவன் தந்திரன் படத்தின் போது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று எனக்கு தெரியும், அதற்கும் சேர்த்து இந்த படத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கணும். ஒரு இயக்குனருக்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. எனக்கு வனமகன் படத்தில் ஜெயம் ரவி கொடுத்த ஆதரவை போல, இங்கு அதர்வா மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் இயக்குனர் விஜய்.

கண்ணன் எத்தனை படம் எடுத்தாலும் அதில் நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், பாடல் வரிகளையும், பாடலாசிரியரையும் மதிக்க தெரிந்த ஒரு இசையமைப்பாளர் ரதன். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்னம் சார். நான் இந்த படத்துக்கு எழுதிய பாடல்களில் எனக்கு தேசமே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். விவசாய பிரச்சினை மட்டும் பேசாமல் மற்ற பிரச்சினைகளையும் பற்றி பாடலில் சொல்ல நினைத்தேன், அதற்கு வாய்ப்பு கொடுத்த கண்ணன் சாருக்கு நன்றி என்றார் பாடலாசிரியர் விவேக்.

தற்போதைய மிக முக்கியமான பிரச்சினையை பேசியிருக்கிறது இந்த பூமராங். ஆயுத எழுத்து படத்தில் வந்த ஜன கன மண பாடலை போன்ற ஒரு பாடல் தான் இந்த ‘தேசம்’ பாடலும். எல்லா வேலையையும் தன் தோள்களில் போட்டுக் கொண்டும் கூட, மிகச்சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார். தண்ணீர் சேமிப்பை நாம் வீட்டில் இருந்தே தொடங்கலாம். நீரை வீணாக்காதீர்கள், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தண்ணீர் பஞ்சம் வரும். மீம்ஸ் போடறவங்க எல்லாம் கொஞ்சம் பொறுப்பா இருக்கணும், மக்களும் கண்ட கண்ட மீம்ஸ் ஷேர் பண்ணாதீங்க என்றார் நடிகர் சதீஷ்.

கண்ணன் அவர்களின் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். ரொம்ப புத்திசாலி இயக்குனர். நடிகர்களுக்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கும் ஒரு இயக்குனர். நான் இன்று எல்கேஜி படம் நடிக்க மிக முக்கிய காரணம் அதர்வா தான். அவர் தான் நீ இப்படி ஒரு படம் நடிக்கலாமே என சொல்லி என்னை நடிக்க உந்தினார். சமுத்திரக்கனி மாதிரி ஒரு நண்பன் இருந்தால் வாழ்க்கை சுபம். நடிகர்கள் எல்லாம் என்ன பெருசா கருத்து சொல்ல வர்றீங்கனு கேட்குறாங்க, இன்றைய காலத்தில் எல்லோரும் நிச்சயம் கருத்து சொல்லணும் என்றார் ஆர்ஜே பாலாஜி.

மேயாத மான் படத்தில் தங்கச்சியா நடிக்கிறப்போ எனக்கு அவ்வளவா தெரியாது, அது தான் நம்மை நல்ல இடத்துக்கு கொண்டு போகும் என்று. நீங்க நல்லா, அழகா இருக்கீங்கனு சொல்றத விட, நல்லா நடிக்கிறீஙகனு சொல்றது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார் நாயகி இந்துஜா.

நானும் ஒரு தமிழ் பையன் தான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நான் இசையமைக்க முடியாத சூழல். ஆனாலும் கண்ணன் சார் தான் நான் வெயிட் பண்றேன், நீ தான் இசையமைக்கணும் என சொல்லி என் மீது நம்பிக்கை வைத்தார். நான் இசையமைப்பாளர் ஆக மிக முக்கியமான காரணம் ஏ ஆர் ரகுமான் தான். ரோஜா பாடல்களை நான் குழந்தையாக இருக்கும்போது கேட்டேன், அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றார் இசையமைப்பாளர் ரதன்.

நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பது தான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்பது உண்மை தான். 50 நாளில் படத்தை முடிப்பேன் என சொல்லி, 43 நாட்களில் மிக வேகமாக படத்தை முடித்து விட்டார். மொத்த குழுவின் உழைப்பு அபரிமிதமானது. எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். தயாரிப்பாளராகவும் முழு கவனத்துடன் இருப்பார். ரதன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக இருந்தார் கண்ணன். நம்ம ஊரு இசையமைப்பாளர் ரதன் தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கி விட்டு வந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷம். சுஹாசினி அவர்களுடன் நடிப்பது எனக்கு பெருமை என்றார் நாயகன் அதர்வா முரளி.

2008ல் ஜெயங்கொண்டான் ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று பூமராங். இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது பெருமையான விஷயம். சுஹாசினி அவர்களை சந்தித்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை. கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழக்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இது கமெர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும் என்றார் இயக்குனர் கண்ணன்.

விழாவில் நாயகி மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர் ஆர் கே சரவணன், முருகேசன், ஈரோடு கலெக்டர் அழகிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், கலை இயக்குனர் சிவ யாதவ், எடிட்டர் செல்வா, வெங்கட் சுபா ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.