ஐ.நா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடிய கவிஞர் வைரமுத்துவின் கவிதை

ஐ.நா சபையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் இந்தியாவின் பங்களிப்பாக நடந்த நடன நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் கவிதையும் இடம்பெற்றது. அந்தக் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்.
பரதநாட்டியக் குழுவோடு ‘நடராஜர் ஆராதனை’ என்ற நடனாஞ்சலியில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘அவசரத் தாலாட்டு’ என்ற கவிதைக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார். ‘ரத்ததானம்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற அந்தக் கவிதை வேலைக்குச் செல்லும் பெண்களின் துயரம் பற்றியதாகும். இல்லத்தரசிகளாக இருந்த பெண்கள் அலுவலகப் பெண்களாக மாறும்போது இரண்டு சுமைகளையும் அவர்களே சுமக்கிறார்கள்.
வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாடும் அவசரத் தாலாட்டாக அந்தக் கவிதையைக் கவிஞர் எழுதியிருக்கிறார். இது இந்தியப் பெண்களுக்கு மட்டுமல்ல உலகப் பெண்களின் அன்றாட அனுபவமாகும்.
உலக மகளிர் தினத்துக்குப் பொருத்தமான இந்தக் கவிதையைத் தேர்ந்தெடுத்து ஐஸ்வர்யா தனுஷ் ஆடியபோது அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கவிதை இதுவாகும் –
”சோலைக்குப் பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்குப் போகின்றேன்
வெண்ணிலவே கண்ணுறங்கு!
அலுவலகம் விட்டு
அம்மா வரும் வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு
கேட்டபடி கண்ணுறங்கு!

ஒன்பது மணி யானால்
உன் அப்பா சொந்தமில்லை –
ஒன்பது முப்பதுக்கு
உன் அம்மா சொந்தமில்லை

ஆயாவும் தொலைக்காட்சி
அசதியிலே தூங்கிவிட்டால்
தூக்கத்தைத் தவிரத்
துணைக்கு வர யாருமில்லை!

இருபதாம் நூற்றாண்டில்
என் கருவில் வந்தவளே!
இதுதான் கதியென்று
இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும்
தூயவளே உன் தொட்டில்
ஓரத்தில் உன் நினைவு
ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கிப்
பிதுங்குகின்ற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து
இறங்குகின்ற வேளையிலும்

கோப்புக்குள் மூழ்கிக்
குடியிருக்கும் வேளையிலும்
பூப்பூவாய் உனது முகம்
புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய்மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே
கனவு கண்டு – நீயுறங்கு!

புட்டிப்பால் குறையவில்லை
பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்ப்பாலும் தாயும் இன்றித்
தங்கம் உனக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உனை அணைத்தால்
சுரக்காத மார்பும்
சுரக்குமடி கண்ணுறங்கு!

தாயென்று காட்டுதற்கும்
தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுக்கிழமை வரும்
நல்லவளே கண்ணுறங்கு!”

ஐ.நா சபையில் அரங்கேற்றப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் இரண்டாவது கவிதை இதுவாகும். வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற வைரமுத்துவின் உலக சமாதானப் பாடலை ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆண்டு ஐ.நா சபையில் பாடியிருக்கிறார். நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடிய பாடலுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்.