வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம் ‘கனவு வாரியம்’

இயக்குனர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) தயாரிப்பில் உருவான ஜனரஞ்சகமான திரைப்படம் ‘கனவு வாரியம்’, திரைக்கு வரும் முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச ‘ரெமி’ விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் ‘கனவு வாரியம்’. ‘ரெமி’ விருதை இதற்கு முன் வென்றவர்கள் ‘ஜூராஸிக் பார்க்’ படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ‘லைப் ஆப் பை’ படத்தை இயக்கிய ஆங் லீ, ‘கிளேடியேட்டர்’ படத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட், ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை இயக்கிய ஜார்ஜ் லுகாஸ், ‘த காட்பாதர்’ படத்தை இயக்கிய பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோ. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அருண் சிதம்பரம், 2 ‘ரெமி’ விருதுகளை வென்ற முதல் இந்திய இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் ‘கனவு வாரியம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

“93 வருட பாரம்பரியம் உள்ள உலகின் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை வெளியிடுவதை எண்ணி ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறோம். ‘கனவு வாரியம்’ விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படம் காதல், காமெடி, சென்ட்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். வார்னர் பிரதர்ஸ் படத்தை வெளியிடுவதால் ‘கனவு வாரியம்’ வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதுவும், ‘கனவு வாரியம்’ வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இது ‘கனவு வாரியம்’ படக்குழுவினருக்கும், என் போன்ற வளரும் இளம் இயக்குனர்களுக்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தருவதாகும்” என்றார் இயக்குனர் அருண் சிதம்பரம்.