Project Hail Mary விண்வெளி காவியம் !!

அழிய போர சூரியனை காப்பாத்த பூமி-ல இருந்து கிளம்பி போர ஒரு ஸ்கூல் வாத்தியார் கதை தான் Project Hail Mary.
Andy Weir எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய வரும் ‘Project Hail Mary’ திரைப்படம், Sci-Fi ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அறிவியல் என்பது வெறும் எண்களை வைத்து ஆடும் விளையாட்டு அல்ல, அது உயிர் பிழைப்பதற்கான போராட்டம் என்பதை ஒவ்வொரு Sci-Fi படமும் மனிதர்களுக்கு உணர்த்தும், இந்தப் படமும் அதை செய்துள்ளது.
உலகின் ஆதாரமே சூரியன் தான் என்று நம்பப்படும் போது, அது அழிந்தால் உலகும் அழியும். சரி.. அதை அழிப்பது எது? அது Astrophage எனும் ஒரு உயிரினம். அது சூரியனை தின்று கொண்டு இருக்கிறது.

அதை அழிக்காமல் சூரியனை காப்பாற்ற முடியாது. ஆனால் அதன் சிறப்பம்சமே அது கொஞ்சம் கொஞ்சமாக இனப்பெருக்கம் செய்து வளர்ந்து கொண்டே இருப்பது தான்.

இப்போது அதை அழிக்க வழி தேடும் போது, பரந்த விண்வெளியில் பல நட்சத்திரங்கள் அதனால் பாதிக்கப்பட்டாலும், ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் அதனால் பாதிக்கப்படவில்லை. எனவே அந்த நட்சத்திரத்திற்கு சென்றால், வழி கிடைக்கும் என்று மூட்டையை கட்டி கொண்டு கிளம்புகிறது ஒரு குழு..

அந்த குழுவில் molecular biologist ஆகவும், ஒரு ஸ்கூல் டீச்சராகவும் இருக்கும் கிரேஸ் இணைகிறார். விருப்பமில்லாமல், விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அவர், உடன் வந்த அனைவரும் இறந்த பிறகு, தனிமை மட்டுமே துணை என்று அலையும் போது அங்கு ஒரு ஏலியனை சந்திக்கிறார்.

பூமியின் சூரியனை போல, அவர்களது சூரியனும் அழிந்து கொண்டு இருக்கிறது. அதனால் இருவரும் ஒன்று சேர்ந்து Astrophage அழிக்கும் வழியை தேடி செல்கிறார்கள்.

போகும் வழியில் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பும் உரையாடலும் தான் ஒட்டுமொத்த திரைப்படமும்.

நட்பு, தனிமை, சோகம், நம்பிக்கை என அனைத்தையும் கலந்து கட்டி அடித்து இருக்கிறது Project Hail Mary..

Sci-Fi ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம் Project Hail Mary.

இந்த படத்தின் பலமே அதன் பின்னால் இருக்கும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தான்.
புகழ்பெற்ற இரட்டை இயக்குனர்களான Phil Lord & Christopher Miller இப்படத்தை இயக்கியுள்ளனர்.
இந்தப் படத்தில் ‘கிரேஸ்’ (Ryan Gosling) மற்றும் ‘ராக்கி’ (Alien Character) இடையிலான நட்பை வெறும் இயந்திரத்தனமாக இல்லாமல், உயிரோட்டம் நிறைந்த காட்சியாக இவர்கள் திரையில் கொண்டு வந்துள்ளனர்.
The Martian படத்திற்காக ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பெற்ற Drew Goddard இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். நாவலில் உள்ள சிக்கலான அறிவியல் அம்சங்களை, பாமர மக்களும் ரசிக்கும்படி விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றியதே இவரது ஆகச்சிறந்த உழைப்பு.
Dune மற்றும் The Batman படங்களின் ஒளிப்பதிவாளரான Greig Fraser, ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல இருக்கிறது.
விண்வெளியில் உலாவும் நாயகனின் ஒருவித தனிமை உணர்வையும், அதே சமயம் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் தனது கேமரா கோணங்கள் மூலம் காட்சிப்படுத்தி, ரசிகர்களுக்கு விருந்தாகவே படைத்துள்ளார்.
இந்த படத்தின் மிகப்பெரிய சவால், மனித உருவம் அல்லாத ‘ராக்கி’ என்ற ஏலியனை வடிவமைப்பது தான். கிராபிக்ஸ் என்று தெரியாத அளவிற்கு, அதன் சிலந்தி போன்ற உடல் அமைப்பு, அது பேசும் விதம், நகரும் விதம் என தொழில் நுட்ப கலைஞர்கள் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.