பிளாக் கோல்டு திரை விமர்சனம் !

வழக்கமான கிரைம் கதைகளிலிருந்து விலகி, நமக்குப் பரிச்சயமில்லாத ஒரு உலகத்தைத் திரையில் கொண்டுவர முயன்றிருக்கிறது ‘பிளாக் கோல்டு’. மனிதர்களின் தலைமுடிக்குப் பின்னால் இயங்கும் சர்வதேச வணிகம், அதைக் கைப்பற்ற நினைக்கும் குற்றக் கும்பல்கள் என வித்தியாசமான பின்னணியில் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். இந்த வணிகத்தின் பின்னணியில் ஒரு குடும்பம் சிக்கிக்கொள்ள, தனது தந்தையை மீட்க மகன் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் மையம்.

ஒரு குடும்பத்தின் கதை மட்டுமின்றி, கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர், அண்டர்கிரவுண்ட் நெட்வொர்க்கில் இயங்கும் நபர்கள் எனப் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் இணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி அடையாளத்தையும் பின்னணியையும் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, கதையின் அடிப்படையும் அதன் பின்னணியில் இருக்கும் வணிக உலகமும் புதுமையான அனுபவத்தைத் தருகின்றன.

வெற்றி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். தந்தையைத் தேடிச் செல்லும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பாக வெளிப்படுகிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெற்றிக்கு இந்தப் படமும் ஒரு நல்ல கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அபிராமி வெங்கடாசலம் காவல்துறை அதிகாரியாக கம்பீரமான தோற்றத்துடன் கவனம் ஈர்க்கிறார். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மற்ற நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

இத்தனை கதாபாத்திரங்களையும் ஒன்றிணைத்திருக்கும் விதத்தில் இயக்குநரின் உழைப்பு தெரிந்தாலும், அவற்றை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் சில இடங்களில் தடுமாற்றம் இருக்கிறது. குறிப்பாக, இடைவேளை வரையிலான காட்சிகள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு கதை முக்கியமான கட்டத்தை அடைந்தாலும், தந்தையைத் தேடும் பயணமும் விசாரணைக் காட்சிகளும் இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருக்கலாம். நாயகிக்கான கதாபாத்திரமும் குறைவான காட்சிகளிலேயே முடிந்துவிடுகிறது.

‘நான் மகான் அல்ல’, ‘பொல்லாதவன்’ போன்ற படங்களின் பாணியில் ஒரு அழுத்தமான கிரைம் த்ரில்லரை உருவாக்குவதற்கான வாய்ப்பு இந்தக் கதையில் இருந்தது. கதாபாத்திரங்களை உருவாக்கியதிலும், நடிகர்களிடமிருந்து சிறப்பான நடிப்பைப் பெற்றதிலும் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்கிறார். அதே அளவிலான கவனத்தைத் திரைக்கதையின் வேகம், காட்சிகளின் பரபரப்பு ஆகியவற்றிலும் செலுத்தியிருந்தால் ‘பிளாக் கோல்டு’ இன்னும் சிறப்பான திரைப்படமாக அமைந்திருக்கும்.