கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான் ! ’சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி!*

 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில்

 

நடிகர் சத்யராஜ் பேசியதாவது,

 

“சரியான மனிதரிடத்தில் இருந்தால் நமக்கும் சரியான விஷயங்கள் நடக்கும். அப்படி எம்.ஜி.ஆரிடம் இருந்த நல்ல குணங்கள் ஐசரி வேலனுக்கும் அவருடைய மகன் ஐசரி கணேஷூக்கும் வந்திருக்கிறது. வாழ்த்துகள். 45 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் சலூனுடைய முக்கியத்துவம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஹேர்ஸ்டைல் என்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்தபோது ஒரு ஹேர்ஸ்டைலிலும் பொது வாழ்க்கைக்கு வந்தபோது வேறொரு லுக்கிலும் இருந்தார். அதுபோலதான் ரஜினிகாந்த், விஜயகாந்தும். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான, ஹேர்ஸ்டைலை வைத்து படம் எடுப்பது நல்ல விஷயம். சினிமாவில் ஹீரோவுக்கு வெற்றிகள் வர வர அடுத்தடுத்தப் படங்களில் பட்ஜெட்டை ஏற்றினால் மட்டுமே வேறொரு தளத்திற்குப் போக முடியும். ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ரன் பேபி ரன்’ இப்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என பாலாஜியின் படங்களின் பட்ஜெட் அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டேப் போகிறது. குறிப்பாக, இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அவ்வளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறது. சிறப்பான சிஜி பணிகளுக்கு தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். ஒவ்வொரு ஹீரோவுக்கும் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு ஒரு மைண்ட்செட் இருக்கும். அதைத்தாண்டி அவர் செலவழிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான் அதற்குக் காரணம். இதற்கு முன்பு கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு இவர்களுடன் சேர்ந்துதான் காமெடி செய்திருக்கிறேன். ஆனால், நானே ஒத்தைக்கு ஒத்தையாக நின்று காமெடி செய்தது இந்தப் படத்தில்தான். திருவிளையாடல் நாகேஷ் போல, ‘தனியா நடிக்க வச்சுட்டானே’ என்றுதான் நடித்தேன். இயக்குநர் கோகுலின் அந்த தைரியத்திற்கு நன்றி. வில்லன் ரோல் நடித்துவிட்டு கெஸ்ட் ரோல் நடிக்க வேண்டும் என்றால் யோசிப்பேன். ஆனால், அந்த தைரியத்தை விஜய்சேதுபதி எனக்குக் கொடுத்தார். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ பட்டம் பொருத்தமானது. நான் முதல் படத்தில் நடித்ததைப் போல இந்த சிங்கப்பூர் சலூனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஏனெனில், காமெடி நடிகர் என எனக்கு இன்னொரு கதவு திறக்கப்படும்” என்றார்.

 

இயக்குநர் கோகுல் பேசியதாவது,

 

“ஒரு படத்தின் கண்டெண்ட் வலுவாக இருக்கும்போது, அதை நம்பி தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்தான் அங்கு ஹீரோ. அப்படி எனக்குக் கிடைத்த சூப்பர் ஹீரோதான் ஐசரி கணேஷ் சார். அவருக்கு நன்றி. அந்த சூப்பர் ஹீரோவை எனக்கு அறிமுகம் செய்தவர் என்னுடைய ஹீரோ ஆர்.ஜே. பாலாஜி. காட்சி சிறப்பாக வரவேண்டும் என்று அவரை நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். அதை எல்லாம் சகித்துக் கொண்டு சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறார். பார்பர்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும். சத்யராஜ் சார் சீனியர் நடிகர். அவர் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பாரா என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை எல்லாம் உடைத்து அவர் குழந்தைப் போல ஒத்துழைப்புக் கொடுத்தார். இவருடன் வேலைப் பார்த்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். நான் ரொம்ப நாளாக யோசித்தப் படம் இது. வாழ்க்கை அடுத்து நமக்கு என்ன அதிசயம் வைத்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அப்படியான படம்தான் ‘சிங்கப்பூர் சலூன்’. நான் இதுவரை எடுத்த படங்களிலேயே இதுதான் சிறந்தது. படக்குழுவினர் அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். எனக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் வரும் நபர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். அவர் இன்று வந்திருப்பது சந்தோஷம். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”

 

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது,

 

“படத்தின் டிரெய்லர் பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான் . ஆனால், திறமையான இயக்குநர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்”.