முதலமைச்சர் மு.க ஸ்டாலின் `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்’ ஐ திறந்து வைத்தனர்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம் ஸ்டூடியோஸ். பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்படத் தயாரிப்பில் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளையும், மிக பழைமையான கார்களையும், இரு சக்கர வாகனங்கள் கொண்ட `ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்’ உருவாக்கியிருக்கிறார்கள்.
அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அரங்கைப் பார்வையிட்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோஸ் தமிழ் சினிமாவில் தயாரித்து கவனம்பெற்ற படைப்புகள் பற்றிய குறிப்புகளும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், விண்டேஜ் கார்கள், படத்தொகுப்புக் கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த மியூசியம் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்,

“நான் பிறந்த இடமே ஏ.வி.எம் தான். இன்று எனக்கு ஒரு பொன்னான நாள். இந்த மியூசியம் வெறும் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டது அல்ல. சுமார் 80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாறு இதில் அடங்கியிருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஏ.வி.எம் நிலைத்து நிற்பதற்கு மிக முக்கிய காரணம் மெய்யப்பன் செட்டியார் அவர்கள். அவரை திருப்திபடுத்துவது ஆகாத காரியம். ஒரு சீன் பிடிக்கலனாலும் விடவே மாட்டார் . திரும்ப திரும்ப படப்பிடிப்பு செய்து, துல்லியமான படைப்பு வரும்வரை எடுக்கச் சொல்வார். செட் வொர்க், சாங் ரெக்கார்டிங், பாடல் வரிகள் போன்ற சின்ன சின்ன நுணுக்கங்களையும் படம் வெளிவரும் வரை சரிபார்த்துக் கொண்டே இருப்பார்.அப்படி எடுத்துதான் நான் பெரிய இயக்குநர் ஆனேன். நான் பயன்படுத்தின கேமரா, ரெக்கார்டர் , வாகனங்கள் போன்றவை இங்கு இடம்பெற்று இருக்கிறது. திரைத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் இதனை பொருட்காட்சியாக எண்ணாமல் பாடமாகக் கருதி பார்வையிட வேண்டும். அப்பேர்ப்பட்ட காணக் கிடைக்காத களஞ்சியம் இந்த ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம். இப்போது இருக்கக்கூடிய இயக்குநர்களும், நடிகர்களும் கமர்ஷியலுக்காக படம் எடுக்காமல் கதைக்காக படம் எடுத்தால் எப்போதுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும்.” என்றார்.

Image

ஏ.வி.எம் குழுமத்தின் அங்கமான, தயாரிப்பாளர் எம் எஸ் குகன் மியூசியம் குறித்துத் தெரிவிக்கையில்,

“என் சிறு வயது முதல் நான் சேகரித்து வந்த 40க்கும் மேற்பட்ட வின்டேஜ் கார்களின் கலெக்சன் இந்த மியூசியத்தில் இடம்பெற்றிருக்கிறது. நாங்கள் தயாரித்த நூற்றுக்கணக்கான படங்களின் தொழில்நுட்பக் கருவிகள் இருக்கின்றன. வரும் மாதங்களில் `சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு பயன்படுத்திய ஆடைகள், `அன்பே வா’ திரைப்படத்தில் எம்ஜிஆர் பயன்டுத்திய ஆடைகள் மேலும் பல காஸ்டியூம்களும், படப்பிடிப்புக் கருவிகளும் இங்கு இடம்பெற உள்ளன. இந்த மியூசியம் முற்றிலும் பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே. எந்த படப்பிடிப்பிற்கும் இங்கு அனுமதி இல்லை. ஏவிஎம் தயாரித்த திரைப்படங்கள் மற்றும் உலக சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்புகளை திரையிடவும் திட்டமிட்டுள்ளோம்” எனப் பெருமையுடன் தெரிவித்தார்.