விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விஜய் ஆண்டனி, “டிஷ்யூம் படத்தில் நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் என்னால் வந்திருக்க முடியாது. அதேபோல ‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்கு போட்ட பிச்சை. இனி எத்தனை படங்களில் நடித்தாலும் ‘பிச்சைக்காரன்’ போல ஒரு படம் எனக்கு கிடைக்காது. அந்த கதையை நீங்கள் சொல்லும்போது எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக சொன்னீர்கள் என்பது எனக்குத் தெரியும். படம் கொடுத்ததற்கு நன்றி.
‘பிச்சைக்காரன் 2’ படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என காத்திருந்தேன். அதன்பிறகு வேறு வழியில்லாமல் படத்தை ஆரம்பித்தேன். ஆரம்பித்து 10 நாட்கள் படம் என் கைக்குள் வரவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் கைவசமானது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் டைரக்ஷனை கற்றுக்கொண்டேன். ‘பிச்சைக்காரன்’ படத்தின் காப்பியாகத்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். நிறைய நேர்காணலில் என்னிடம் படம் இயக்குவீர்களா என கேட்டபோது இல்லை என சொல்லி மறுத்திருக்கிறேன். தற்போது சூழல் இயக்குநராக்கிவிட்டது” என்றார்.
இயக்குநர் சசி பேசுகையில், “விஜய் ஆண்டனியிடம் சாமானிய மனிதன் ஒருவரின் பார்வை இருக்கும். ‘பிச்சைக்காரன்’ படம் இயக்கிக் கொண்டிருந்தபோது நான் சாதாரணமாக வைத்த ஒரு காட்சியை புகழ்ந்து கூறியிருந்தார். படம் வெளியானபோது அந்தக் காட்சியை பலரும் கைதட்டி ரசித்தார்கள். அப்படியான ஒரு சாமானியனின் டெஸ்ட் அவரிடம் உள்ளது. அதுதான் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால், நான் ‘100 கோடி வானவில்’ படத்தை இயக்குவதில் மும்முரமாக இருந்ததால் இந்தப் படத்தை என்னால் இயக்க முடியவில்லை. ‘பிச்சைக்காரன் 2’ சிறப்பான படமாக வந்திருக்கும் என நம்புகிறேன்” என்றார்