யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள் !!

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் & கிரைன்ஸ் (Noise & Grains), முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமான சிம்பொனி கச்சேரியாக சென்னையில் அரங்கேற்றி, தலைமுறைகள் கடந்து அவரை ரசித்து வரும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்திய பொழுதுபோக்கு துறையில் பல்வேறு பிரம்மாண்டமான மற்றும் வெற்றிகரமான கலாச்சார நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் நாய்ஸ் & கிரைன்ஸ், யுவான்ஷங்கர் ராஜா நிகழ்ச்சியை தெளிவான திட்டமிடலோடும், அதிநவீன தொழில்நுட்பத்தோடும், ரசிகர்களுக்கு எந்த வித சிரமமும் இன்றியும் ஒருங்கிணைத்து வழங்கி மறக்க முடியாத இசை அனுபவமாக மாற்றியது.

வழக்கமான நேரடி இசை நிகழ்ச்சிகளைப் போல் இல்லாமல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்புகளை ஒரு பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ரா இசை அனுபவமாக வாக்கிங் த்ரூ தி ரெயின்போ மாற்றியது. புகழ்பெற்ற பின்னணி இசைகள், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்கள் மற்றும் இதுவரை வெளியிடப்படாத இசைக்கோர்வைகள் என யுவனின் பல்வேறு படைப்புகளை இதுவரை அனுபவித்திராத ஒரு புதிய கோணத்தில் ரசிக்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு இந்நிகழ்ச்சி வழங்கியது.

வழக்கமான இசை நிகழ்ச்சியைத் தாண்டி, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை முற்றிலும் புதிய வடிவில் ரசிகர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே Noise & Grains நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடல், பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் ஒவ்வொரு அம்சத்திலும் செலுத்தப்பட்ட நுணுக்கமான கவனம் ஆகியவற்றின் மூலம், கலை, இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை ஒருங்கிணைத்து, யுவனின் இசையே நிகழ்ச்சியின் நாயகனாக விளங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது.

Walking Through the Rainbow என்பது கற்பனை, ஆர்வம் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையின் மீதான ஆழமான காதலில் இருந்து பிறந்த ஒரு கனவு என்று கூறிய நிகழ்ச்சியின் ஷோ டைரக்டர் கார்த்திக் ஸ்ரீநிவாஸ், யுவனின் இசை மீதான ரசிகராகத் தொடங்கிய இந்தப் பயணம், அந்தக் கனவை இயக்கி, அது மேடையில் உயிர்பெறுவதை நேரில் காணும் மறக்க முடியாத வாய்ப்பாக மாறியது என்றார்.

“Walking Through the Rainbow ஒரு வழக்கமான இசை நிகழ்ச்சி அல்ல. கற்பனை, ஆர்வம் மற்றும் இசையின் மீதான ஆழமான காதலில் இருந்து உருவான ஒரு கனவு இது. யுவன் சாரின் ரசிகராக இந்த நிகழ்ச்சியை கற்பனை செய்தது ஒரு சிறப்பான அனுபவம். அதே கனவை இயக்கி, அது மேடையில் உயிர்பெறுவதைப் பார்ப்பது உண்மையிலேயே மறக்க முடியாத தருணம். யுவன் சாரின் மீதான அன்பின் பயணம் இது,” என்று அவர் மேலும் கூறினார்.

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடல் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. இசையின் அடிப்படை உணர்வுகளோடு, இசைக்கலைஞர்களின் திறமை மற்றும் இசையை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் அனுபவம் ஆகியவற்றுடன் ரசிகர்களை இணைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என Walking Through the Rainbow நிகழ்ச்சியின் தயாரிப்பு இயக்குநர் மகாவீர் தெரிவித்தார்.

“கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் ஒவ்வொரு அம்சத்தையும் தொடர்ந்து செம்மைப்படுத்திய பிறகே இந்தக் கனவை நனவாக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் இசையை அனுபவிக்கும் விதமும், இசையுடன் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பும் மாறிவிட்டது. அதனால், இசையின் அடிப்படை உணர்வு, இசைக்கலைஞர்களின் திறமை மற்றும் இசை உயிர்பெறும் தருணத்தை நேரடியாகக் கேட்டு அனுபவிப்பது ஆகியவற்றை மீண்டும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று விரும்பினோம்.

எங்களைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சி இன்னும் மிகப் பெரிய ஒரு பயணத்திற்கான தொடக்கம் மட்டுமே. Walking Through the Rainbow மூலம் நாங்கள் உருவாக்கியிருப்பது முதல் படி. இதற்குப் பிறகு இந்த அனுபவத்தை இன்னும் மிகப் பெரிய அளவில், மேலும் பல ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.