தயாரிப்பு – கிராண்ட் பிக்சர்ஸ், அப் 7 வெஞ்சர்ஸ்
இயக்கம் – அபின் ஹரிஹரன்
நடிப்பு – ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் & அஞ்சு குரியன்
மெடிகல் துறையில் நிகழும் சம்பவங்களை வைத்து க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் அதர்ஸ் படம் எப்படி இருக்கிறது.
ஒரு விபத்தில் 4 சடலங்கள் கிடைக்கிறது. போலீஸ் நாயாகன் குழு அதை விசாரிக்க ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் நாயகி கௌரி கிஷன் மருத்துவராக வேலை பார்க்கும் மருத்துவமனையில் ஒரு பெரும் சிக்கல் உருவாகிறது. அந்த விபத்துக்கும், மருத்துவமனையில் நடக்கும் விஷயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும் இருக்கிறது. அது என்ன தொடர்பு? மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பது யார்? அந்த விபத்தின் பின்னணியில் இருப்பது யார்? என்பதே இந்தப்படத்தின் மையம்
நாயகன் ஆதித்யா மாதவனுக்கு இது தான் முதல் படம், அவரது வயதுக்கு மீறிய, கொஞ்சம் மெச்சூரிட்டியான கதாபாத்திரம். ஆனால் மிகக்கச்சிதமாக தன்னை போலீஸ் கதாப்பாத்திரத்தில் பொருத்திக்கொண்டிருக்கிறார். நடிப்பிலும் புதுமுகம் போல இல்லாமல், காதல், ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தவே செய்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்ல ஒரு இளம் ஹீரோ கிடைத்திருக்கிறார்.
நாயகியாக 96 ஹீரோயின் கௌரி கிஷன். வழக்கமான ஜோடியாக இல்லாமல், கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாப்பாத்திரமாக மிளிர்கிறார். அவரது சேஸிங் காட்சி படத்தில் விறுவிறுப்பாக வந்துள்ளது.
இளசுகளின் ஃபேவரைட் அஞ்சு குரியனுக்கு டிப்டாப் போலீஸ் அதிகாரியாக பொருத்தமான ஒரு கதாபாத்திரம், நன்றாகவே நடித்திருக்கிறார்.
முனீஷ்காந்த் காமெடி காட்சிகளில் நன்றாக சிரிக்க வைக்கிறார்.
ஹரிஷ் பேரடிழ் மாலா பார்வதி, ஜெகன், ஆர்.சுந்தர்ராஜன் என மற்ற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். . ஜிப்ரான் இசை திரில்லர் படத்திற்கான உணர்வை கொண்டுவருகிறது. அதைத்தாண்டி டூயட் பாடல் ஓகே. ராமர் எடிட்டிங்கில், படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
ஒரு கொலை வழக்கு அதை நூல் பிடித்து போக அடுத்தடுத்து வரும் ஆச்சரியங்கள் என திரைக்கதை சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. இயக்குனர் அபின் ஹரிஹரன். கொஞ்சம் சென்சிட்டிவான ஒரு கதைக்களத்தை மிகச் சிறப்பான திரைக்கதை மூலம் மிக அழகாக கையாண்டிருக்கிறார்.
‘அதர்ஸ்’ என்ற டைட்டில் ஏன் என்பதற்கான காரணமும், டைட்டில் போடப்பட்ட இடமும் பாராட்டுக்குரியது.
யூகிக்க முடியாத திருப்பங்களை வைத்து படத்தை எடுத்திருப்பது ஓகே ஆனால் அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சி தர ஆரம்பித்துவிடுகிறது. அதை சரியாக்கி மேக்கிங்கில் இன்னும் உழைத்திருந்தால் இன்னும் சிறப்பான திரில்லராக வந்திருக்கும்.
ஆனாலும் அதர்ஸ் ஒரு நல்ல திரில்லர் அனுபவத்தை தருகிறது. ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்.
