”வெற்றியும் ஒன்றுமில்லை; தோல்வியும் ஒன்றுமில்லை” !  ”டெவில்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் மிஷ்கின்!

 

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

நடிகை பூர்ணா பேசும் போது.
”நீங்கள் அளித்து வரும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. டெவில் எனக்கு ஒரு படம் மட்டும் இல்லை. அது எனக்கு வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்வுபூர்வமான விசயமாக மாறி இருக்கிறது. என்ன தான் படித்து முடித்தாலும் நம் கல்லூரி முதல்வரைப் பார்த்தால் பயமாக இருக்கும் அல்லவா…? எனக்கு அப்படித்தான் இப்பொழுது இருக்கிறது. மிஷ்கின் என் பிரின்ஸிபால். என்னை ஒரு தாயாக சவரக்கத்தி படத்தில் காட்டியது மிஷ்கின் மற்றும் ஆதித்யா சார் தான். இன்று நான் உண்மையாகவே ஒரு குழந்தைக்கு தாயாகும் போதும் இவர்களின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. மிஷ்கின் மற்றும் ஆதித்யா இருவரிடமும் அடிக்கடி சொல்வேன் உங்கள் படங்களில் சிறிய கேரக்டர் இருந்தாலும் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று. அதை இப்பொழுதும் கூறிக் கொள்கிறேன்.. விதார்த் உடன் நான் ஏற்கனவே நடித்திருக்கிறேன்… அருண் உடன் நடிக்கும் போது தான் எனக்கு என் வயிற்றில் குழந்தை வளர்ந்து வருவது தெரிய வந்தது.  ஆரம்பக்கட்டத்தில் இருந்து மிஷ்கின் அவர்களின் இசை நாட்டம் மற்றும் இசை புலமை குறித்து எனக்குத் தெரியும், பின்னணி இசை மட்டுமின்றி, பாடல்களின் இசை, அதன் வரிகளில் இருக்க வேண்டிய நுட்பம் என, அவரின் படங்களில் வரும் இசை தொடர்பான எல்லா விசயங்களிலும் முடிவுகளை அவர்தான் எடுப்பார். ஏனென்றால் அவருக்கு நல்ல இசையறிவு உண்டு. டெவில் படத்தில் வரும் பாடல்களுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம்.  என் கணவரை குஷிப்படுத்த நான் அந்தப் பாடல்களை பாடவிட்டு ஆடத் துவங்கிவிடுவேன்..  அவர் இசையிலும் பெரிதாக சாதிப்பார் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும் போது,

இப்படத்தினை வழங்க வேண்டும் என்று  ராதாகிருஷ்ணன் சார், என்னிடம் முதன் முதலில் கேட்டார்.  பின்னர்  ஸ்ரீகாந்த் அவர்களின் வற்புறுத்தலால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்… சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநாக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.

ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்தப் பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநாக சேர்த்துக் கொண்டேன்.. இந்த வாழ்க்கையில் வெற்றி என்பது ஒன்றுமே இல்லை, அது போல் தான் தோல்வியும் ஒன்றுமே இல்லை. இந்த வாழ்க்கையில் நீங்கள் பெரிதாய் எதும் செய்துவிட முடியாது.  சாமான்ய மனிதன் தன் குடும்ப உறவினர்களுக்காக உழைக்கிறான்… இன்னும் வெகு சில மனிதர்கள் இந்த உலக மக்களுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரே… அது எல்லாராலும் முடியாது.

ஒரு படத்தை  நீங்கள் உண்மையாக  எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள்,  சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான்  திரைப்படத்திற்கான உயிர்.  நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் landscape இருக்கும்.

பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் டெவில் திரைப்படம் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். நன்றாக இல்லை என்றால் ஆதரவு கொடுக்க வேண்டாம். தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை. தொடர்ச்சியாக நீ ஓடு… தோல்வி என்பது ஒன்றுமே இல்லை.  நீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்கு வந்த அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.