சினிமாவில் முக்கிய நடிகர்கள் அனைவரும் சமூக விரோதி ! டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சர்ச்சை !

 

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி,ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி,தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா,இமான் அண்ணாச்சி, விஜய் விஷ்வா,சௌந்தரராஜா, சந்திரசேகரா,சிங்கப்பூர் தொழில் ஆலோசகர் ஜவஹர் அலி,படத்தின் இயக்குநர் சியோன் ராஜா, கதாநாயகன் பிரஜின்,டிஃபெண்டர் வழக்கறிஞர்கள் ,படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி, இசையமைப்பாளர் மாலக்கி,கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான் ,நிர்வாகத் தயாரிப்பாளர் வினோ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள்.

இயக்குநர் சியோன் ராஜா பேசும்போது,

“இந்தச் சமூக விரோதி படம் உண்மையில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை யார் உருவாக்குகிறார்கள்? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிக்காட்டும் முயற்சியாக உருவாகியுள்ளது.இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை என்ற நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது.
இங்கே இத்தனை அரசியல் ஆளுமைகள் வந்துள்ளது அந்த நோக்கத்திற்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்திற்காகப் பலரையும் நாம் அணுகிக் கேட்டபோது அனைவரும் இந்தக் கதைக்காக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பாத்திரத்தைக் கேட்டதும் அரை மனதாக ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் கேமராவை ஆன் செய்ததும் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தயாரிப்பாளர் ராஜன் அவர்களைக் கேட்டபோது ஒரு காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்றார். மூன்று காட்சிகள் என்றேன். கதையைக் கேட்ட பிறகு நடித்துக் கொடுத்ததுடன் சம்பளமே வாங்கவில்லை. அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.நாயகன் பிரஜின் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. கேரவான் இல்லாமல் படபிடிப்பு முடித்த நாயகன் அவர்தான்.அவர் மேலும் வளர்வார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பேசப்படுவார். நான் பொழுதுபோக்குக்காகப படம் எடுப்பவன் அல்ல.கலையை அரசியல் படுத்த நினைக்கிறேன். அந்த வகையில் தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். மக்கள் ஆதரவு தர வேண்டும் “என்றார்.

 

கதாநாயகன் பிரஜின் பேசும் போது,

” நான் இத்தனை படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு சிறப்பான படம் என்று எனது உள்ளுணர்வு சொன்னது. இந்தப் படம் வெற்றிபெறும் , இந்தப் படம் இறங்கி அடிக்கும் என்று என் மனதிற்குப் பட்டது.

ஒரு படம் முயற்சி சரிவர அமையவில்லை என்றால் அந்த இயக்குநர் சிறிது காலம் முயற்சி செய்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுவார். ஆனால் இந்த இயக்குநர் இந்தப் படத்திற்காகத் தனது சொத்தை அடமானம் வைத்துள்ளார். இந்தப் படத்திற்காக நான்கு பேர் உதவி இருக்கிறார்கள். அந்த நாலு பேர் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிகழ்ச்சி எதுவுமே சாத்தியப்பட்டு இருக்காது .நான் ஒரு வளர்ந்து வரும் நடிகர். வளர்ந்து வந்தோம் என்றால் யாரையும் அழைக்கும் போது போனைக் கூட எடுக்க மாட்டார்கள் .அப்படி இருந்தும் எனது நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எனக்கு நண்பர்களும் குடும்பமும் பக்கபலமாக இருக்கிறது. அப்படிப் பக்கபலமாக உள்ளவர்கள் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.இந்தப் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறேன் “என்றார்.