வித்தியாசமான முறையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் பி. வாசு

 

தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அறுபதிற்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் பி. வாசுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சந்திரமுகி 2’ படக்குழுவின் சார்பில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் போது தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பி. வாசு பரிசளித்தார்.

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியிருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்சுடன் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராக இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

படத்தின் இயக்குநர் பி. வாசுவின் பிறந்தநாளான நேற்று அவரை ஜி. கே. எம். தமிழ் குமரன், ராகவா லாரன்ஸ் மற்றும் பி. வாசுவின் உதவியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது இயக்குநர் பி. வாசு தன்னுடைய உதவியாளர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனிடையே பிறந்த நாளை கொண்டாடும் இயக்குநர் பி. வாசு தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்பை பரிசாக வழங்கியிருப்பது.. சமூக வலைதளங்களில் பாராட்டை குறித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.