இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில்
வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது…
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த விழாவிற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி.
நடிகர் கார்த்தி பேசியதாவது.
அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது.
அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கமும். என்னுடைய தம்பி இயக்குநராக ஆகியிருப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. மிகப்பெரிய சாதனை படைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது திறமைக்கு எதுவும் ஈடாகாது. உலகத்தின் தலைசிறந்த ஓவியராக வரவேண்டியவர் பாரதிராஜா.
நடிகர் சிவகுமார் பேசியதாவது.
திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதாவது.
என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குநராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குநர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகழிச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன்.