நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்’ ! பி சி ஶ்ரீராம் மிற்கு விருது வழங்கி சிறப்பித்தனர்!

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்நிகழ்வில்

 

நண்பன் குழும நிறுவனர் ஜி கே பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்களின் ஆதரவு இல்லாமல் இந்த விழா இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றிருக்காது.

 

நண்பன் குழுமம் -ஏராளமான சமூக விசயங்களுக்கு கரம் கொடுத்து ஆதரவளித்து வருகிறது. நண்பன் குழுமத்தை தொடங்குவதற்கு முக்கியமான காரணம் நண்பனிசம். இந்த தத்துவம் , நாம் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், மற்றவர்கள் மீது நிபந்தனையற்ற அன்புடன் கூடிய உதவியை செய்ய வேண்டும் என்பதுதான். நண்பனிசம் ஆண் பெண் என்ற பாலின பேதம் இல்லாமல் இருக்க வேண்டும்.

 

கின்னஸ் சாதனை புரிந்த நண்பர் குற்றாலீஸ்வரன் உள்பட.. இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் நண்பர்கள் தான்.

 

நண்பன் குழுமம்- லாப நோக்கில்லாமல் செயல்படும் அமைப்பு. இந்த குழுமத்திலிருந்து தற்போது நண்பன் என்டர்டெய்ன்மென்ட் என்ற புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம். லாப நோக்கமற்ற முறையில் செயல்பட்டு, நிதி ஆதாரத்தை திரட்டும் இந்த அமைப்பு,, முதலில் தமிழகத்திலும், அதன் பிறகு இந்தியாவிலும், அதனைத் தொடர்ந்து உலகளவிலும் எங்களால் இயன்ற உதவியினை தொடர்ந்து செய்யவிருக்கிறோம். எங்களுடைய அறக்கட்டளையை தமிழகம், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்… என தொடர்ந்து சேவைகளை செய்ய விரிவு படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்.

 

நாங்கள் தேர்வு செய்யும் திட்டங்கள் அனைத்தும் தமிழர்களின் நலன்களுக்கானதாக இருக்கும். புதிதாக தொடங்கி இருக்கும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், லாப நோக்கமற்றதாகவே செயல்படும். அதிலும் திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்காக தொடங்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு,, தொடர்ந்து செயல்படும். இதில் முதலீடு செய்ய ஏராளமான முதலீட்டாளர்களும், முதலீட்டு நிறுவனமும் ஆர்வத்துடன் இருக்கின்றன. இதன் மூலம் எங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் இந்த குழுமம் தொடர்ந்து இயங்கும். கடந்த நான்காண்டுகளில் மில்லியன் கணக்கிலானவர்களுக்கு உதவிகளை செய்திருக்கிறோம்.

நண்பனிசம் எனும் கருத்தியலை தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச் செல்வோம் ” என்றார்.

நண்பன் குழுமத்தின் இண்டர்நேசனல் எண்டர்டெயின்மெண்ட் தலைவர் நரேன் ராமசாமி பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் நண்பர்களுக்கும், நண்பர்களின் உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நண்பன் நண்பனிசம்- எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.. எந்தவிதப் பிரதிபலனும் பாராமல்… நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறோம் அல்லவா.. அதுதான் நண்பனிசம். இதைக் கண்டுபிடித்த ஜிகே அவர்களுக்கு நாம் அனைவரும் பாராட்டுத் தெரிவிப்போம்.

நண்பன் ஜி கே வைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சூரிய கிரகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சூரியனைத்தான் அனைத்து கிரகங்களும் சுற்றி வருகிறது. அனைத்து கிரகங்களுக்கும் சூரியன் இல்லை என்றால் வெளிச்சமில்லை. அதாவது நாங்கள் எல்லாம் ஒரு சந்திரன் போன்றவர்கள். ஜி கே சூரியனைப் போன்றவர்.

நடிகர் நாசர் பேசுகையில், ” நண்பன் குழுமத்தைப் பற்றி ஆரி விரிவாகச் சொன்னார். உலகில் இருக்கும் உன்னதமான உறவு நட்பு. உன்னதமான நட்பை ஒரு தத்துவமாக்கி, அதனை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதற்காகவும்.. நம் மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதற்காகவும் முதலில் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளைக்காரன் ஒரு விசயத்தைச் செய்தால்.. அதை உடனடியாக எழுதி வைத்து விடுவார், ஆனால் நாம் பல விசயங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். நட்பிற்கு விளக்கம் தேவையில்லை. அந்த ஒரு எளிய உறவை.. உணர்ச்சியை… உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும் பரப்புகின்ற உங்களுக்கு இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நட்பைக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக நினைக்கிறேன். நட்புடன் இருப்போம் நண்பர்களாகவே இருப்போம்.

இங்கு விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான். நான் வாழ்க்கையில் என்ன ஆவேன் என தெரியாமல் இருந்த காலகட்டத்திலிருந்து என்னை வழிநடத்தியவர்கள். கவிஞர் அறிவுமதி, நான் படத்தை இயக்கும்போது அவராகவே முன்வந்து உதவி செய்தவர். பேராசிரியர் ராமசாமி அவருக்கும் எனக்குமான நட்பு புதிரானது. ஓவியர் டிராட்ஸ்கி மருது இல்லையென்றால் எனக்கு எழுதவே வந்திருக்காது. ” என்றார்.

 

விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பேசுகையில், ” இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது நண்பன் என்ற ஆரோக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று. எனக்கு அளிக்கப்பட்ட விருது, இனி நான் செய்யவிருக்கும் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் நன்றி ” என்றார்.

 

இயக்குநர் சேரன் பேசுகையில், ” நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும். சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது பி.சி. ஸ்ரீராம் சொன்னது போல், அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறோம். நண்பன் குழுமம் அனைவருடனும் இணைந்து.. தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குநர் பாக்யராஜ்.ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் சேரன், கலை இயக்குநர் முதுதுராஜ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாற்று ஊடக மையத்தைத் சார்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் மேடையில் தோன்றி தமிழ் மண்ணின் தொல்லியல் கலைகளை நிகழ்த்தி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்கள்.