அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது! ஸ்டார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கவின் !

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்,

இயக்குநர் இளன் பேசியதாவது,

‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்… ஒரு கார் வாங்க வேண்டும்… கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.. என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.. அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்த கனவை விட்டுக் கொடுக்காமல்… பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்த படம் பேசுகிறது.

ஸ்டார் ஆகி இருக்கும் கவினை, ‘டாடா’ படத்திற்கு பிறகு தான் அவரை சந்திக்கிறேன். இப்படத்தின் கதையை அவரிடம் சொல்லும் போது, முழு கதையும் கேட்டுவிட்டு… ‘இந்த கதையில் வரும் பல சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது’ என்றார். படத்தின் கதை தான் கவினை நாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கவின் நடிக்கும் போது எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். ஒரு நடிகராக என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் தன் நேர்த்தியான நடிப்பால் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பார். இதற்கு சாட்சி படத்தின் முன்னோட்டம். இதற்காக கவினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கிறது. அதை படம் பார்த்த ரசிகர்கள்.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார் .

நடிகை அதிதி பொஹங்கர் பேசியதாவது,

” இயக்குநர் இளன் திறமையானவர். வசனத்தையும்… வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் .. அதனுடன் உணர்வுபூர்வமாக எப்படி நடிக்க வேண்டியதையும் தெளிவாக குறிப்பிடுவார். இந்தப் படத்தில் சுரபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மேடை நாடகத்திலிருந்து வந்திருக்கிறேன். ஒத்திகை முக்கியம் என்பதை நன்கறிவேன். படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் பழகிய தருணங்கள் மறக்க இயலாதவை. படக்குழுவினர் அனைவரும் நட்புடன் பழகினர். கவின் ஒரு சக நடிகராக இருந்தாலும்.. மிகத்திறமையானவர். மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் கவின் பேசியதாவது,

டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்… ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றை கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக.. விரிவாக கதையை சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையை சொல்கிறார் என்று கதையை கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை.. என்னை தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை.. என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.ரசிகர்கள் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கும், ரசிகர்களின் முதலீட்டிற்கும் நியாயமாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குரு எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே ஒட்டுமொத்த பட குழுவும் நம்பிக்கையுடன் பணியாற்றியிருக்கிறது.இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி.. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன். ” என்றார்.