கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பம்பர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் செல்வகுமார் பேசியதாவது.

இந்த இடத்திற்கு நான் வந்ததற்குக் காரணமான பலர் இங்குள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றி, என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் தியாகராஜா அண்ணனுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது, இதற்கு உதவியாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. இது ஒரு குழு முயற்சி. இந்தப்படம் அழுத்தமான கருத்தைப் பேசும். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி.

இயக்குநர் K பாக்யராஜ் பேசியதாவது.

அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது. புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும். புதுத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரித்துள்ளார். இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார்.