சின்னத்திரை நடிகரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னருமான அசீம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களையும் விஜய் சேதுபதியை வைத்து ’டிஎஸ்பி’யையும் இயக்கிய இயக்குநர் பொன்ராம் இயக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால், கதையானது கிராமம் ப்ளஸ் ஹுயுமர் எனக் கலந்து கட்டி இருக்குமென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதிலும் ’வ.வா.ச’ வேற லெவல் என்றே சொல்லலாம். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத எவர்கிரீன் சப்ஜெக்ட். எனவே பொன்ராம் அசீம் இணையும் படமும் இந்த ஃபார்முலாவில் இருக்குமென்கிறார்கள். தற்போது இந்தப் படத்துக்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறதாம்.
அசீமும் இயக்குநர் பொன்ராமும் இப்போது ராஜஸ்தானில் இருக்கிறார்கள். திரைப்படம் குறித்த டிஸ்கசன் மற்றும் படத்துக்கான லொகேஷன் தேர்வு போன்ற விஷயங்களுக்காக அங்கு சென்றிருக்கிறார்களாம். படத்தைத் தயாரிப்பது முக்கிய தயாரிப்பு நிறுவனம் என்கிறார்கள்.அடுத்த சில தினங்களில் பொன்ராம் மற்றும் அசீம் இருவரும் சென்னை திரும்பியதும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படம், அதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.