பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறது. ராஜஸ்தானின் படப்பிடிப்புக்கு சென்ற போது அரிய வகை மான்களை வேட்டையாடியதால் கைது செய்யப்பட்டு கோர்ட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்டையாடிய மான்கள் பிஷ்னோய் இன மக்களால் புனிதமாகக் கருதப்படக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோயிடமிருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சல்மான் கானுக்கு மும்பை போலீஸார் ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கான் தனது பாதுகாப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதனை பற்றி நடிகர் சல்மான் கான் கூறுகையில், பாதுகாப்பற்று இருப்பதை விட பாதுகாப்புடன் இருப்பது மேல். இப்போது பாதுகாப்பு இருக்கிறது. என்னால் சுதந்திரமாக ரோட்டில் சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை. என்னால் வெளியில் தனியாக செல்ல முடியவில்லை. நான் வெளியில் செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டால் எனது பாதுகாப்பு வாகனங்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால்தான் வழங்கப்பட்டுள்ளது.நான் சொன்னதைச் செய்கிறேன். கிஷி கா பாய் கிஷிகி ஜான் படத்தில் 100 முறை அதிர்ஷ்டம் வேண்டும் என்ற டயலாக் இருக்கும். எனக்கும் ஒரு முறை அதிர்ஷ்டம் வேண்டும். நான் கவனத்துடன் இருக்கிறேன். எங்கு சென்றாலும் முழு பாதுகாப்புடன் செல்கிறேன். என்ன நடக்கப்போகிறதோ அது நடக்கும். கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன். என்னை சுற்றி ஏராளமான துப்பாக்கிகள் வருகின்றன என்றார்.
திருமணம் மற்றும் குழந்தை குறித்து கேட்டதற்கு குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறேன். ஆனால் இந்திய சட்டம் அதற்கு அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார். உடனே தயாரிப்பாளர் கரண் ஜோகர் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி கேட்டதற்கு, இப்போது சட்டங்கள் அதிகமாக மாறிவிட்டன. அதனால் எப்படி என்ன செய்வது என்று பரிசீலித்து வருகிறேன். குழந்தைகள் மீது எனக்கு அதிக பிரியம் உண்டு.. ஆனால் இப்போது சட்டங்கள் மாறிவிட்டன.குழந்தைகளை விரும்புகிறேன். ஆனால் குழந்தைகள் தங்களது அம்மாவுடன் தான் வருவார்கள். எங்களுக்கு அம்மா தேவையில்லை. ஆனால் ஒரு குழந்தை தேவை. எனது முன்னால் பெண் தோழிகள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். தவறு என்னிடம் தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.