நடிகர் பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து விட்டு நடிகை நயன்தாராவைக் காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து, திருமணம் செய்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்.
பிரபுதேவா தற்போது நாயகனாகத் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்தியில் சல்மான் கான் படம் உட்பட சில படங்களை இயக்கவும் செய்தார். அதன் பின், பிரபுதேவா அவரின் உறவுக்காரப் பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்யப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், பிரபுதேவா கொரோனா காலத்தில் மும்பையில் முதுகு வலியால் அவதிப்பட்டபோது பிஸியோதெரபிஸ்ட் டாக்டர் ஹிமானி சிங் என்பவரிடம் சிகிச்சைக்காகச் சென்றார்.
நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். கொரோனா காலத்தில், அதாவது 2020ம் ஆண்டு, பெரிதாக யாரையும் அழைக்காமல் டாக்டர் ஹிமானி சிங்கை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அது குறித்து பிரபுதேவா யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது முதல் முறையாகத் தனது இரண்டாவது மனைவியுடன் பிரபுதேவா திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளார்.அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
திருப்பதியில் தனது இரண்டாவது மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு அவருக்குப் பாதுகாப்பாகச் சென்றார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி இருக்கிறது. பிரபுதேவாவின் பிறந்த நாளையொட்டி ஹிமானி சிங் சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது கணவரை ஹிமானி வெகுவாகப் புகழ்ந்துள்ளார். பிரபுதேவா, தன்னை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாகவும் அவரைத் திருமணம் செய்து கொண்டதற்காகப் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.