குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் – இயக்குநர் பா.இரஞ்சித்

பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான் – ’குதிரைவால்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.

கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் பிரதீப் குமாரின் பிரமாண்ட இசைக்குழுவினர் மூலம் படத்தின் பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட்டது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் இசைத்தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில், “குதிரைவால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். ராஜேஷ் முதன் முதலில் இந்தப் படத்தை நான்கரை மணி நேரம் கதை சொன்ன போதே கதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொள்வேன் என்று நம்பினேன். இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் பா.இரஞ்சிதுக்குக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது உங்களுக்கு புதிய உணர்வு ஏற்படுவதோடு, முற்றிலும் வித்தியாசமான உணர்வையும் ஏற்படுத்தும். படத்தை வெற்றிகரமாக திரையரங்கில் வெளியிடும் யாழி மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷுக்கும் நன்றி.” என்றார்.