கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
முழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது, அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம். அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை. சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மாநகரங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்து கதையாக்கி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். விண்டேஜ் கார்த்திக் சாரை இந்த படத்தில் பார்ப்பீர்கள். கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடித்திருக்கிறார். மகேந்திரன் சார் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் இல்லையென்றால் 45 நாட்களில் படத்தை முடித்திருக்க வாய்ப்பே இல்லை. முதலில் 30 பாடல்கள் தான் திட்டமிட்டிருந்தோம், திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனஞ்செயன் மிகச்சிறந்த ஒரு தயாரிப்பாளர். தனஞ்செயன், கார்த்திக் சார் இல்லைனா இந்த படம் இல்லை என்றார் இயக்குனர் திரு.
இசை மற்றும் பாடல்களில் சாம் சிஎஸ் கலக்கியிருக்கிறார், படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். கடல் படத்துக்கு பிறகு பிருந்தா மாஸ்டர் என்னுடைய பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் மிக வேகமாக வேலை செய்யக்கூடியவர். அவர் இருக்கிறார் என்பதாலேயே முன்கூட்டியே படப்பிடிப்புக்கு சென்று விடுவேன். வரலக்ஷ்மி போல்டானவர், ரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை. நான் ஊட்டியில் படிக்கும் போது, என் அப்பாவோடு நிறைய பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடல் படத்துக்கு பிறகு சென்னை வந்த பின்பு தான் அவரோடு பக்கத்தில் இருந்து பழக ஆரம்பித்தேன். ஆனால் இந்த படத்தில் தான் படப்பிடிப்பில் அவரை நேரில் பார்த்தேன். அவரின் உழைப்பை பார்த்து வியந்தேன். இயக்குனர் திருவுக்கு யாரிடம் எப்படி வேலை வாங்கணும்னு தெரியும், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் என்றார் நாயகி கௌதம் கார்த்திக்.
ஷாந்தனு மூலம் திரு சார் எனக்கு அறிமுகம். என்னுடைய புகைப்படத்தை பார்த்து தான் நிறைய படங்களில் என்னை நடிக்க அழைத்திருக்கிறார்கள். இந்த படத்திலும் என் கதாபாத்திரமும், எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்றார் நடிகர் சந்தோஷ் பிரதாப்.
நிறைய படங்களில் வேலை பார்த்தாலும் ஒரு சில படங்கள் தான் நமக்கு மிகவும் பிடித்த படங்கள் லிஸ்டில் இருக்கும். அப்படி ஒரு படம் தான் இந்த மிஸ்டர் சந்திரமௌலி. மிகவும் பேசப்படும் பாடலான ஏதோதோ பாடலை வேறு ஒருவர் தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நானே அந்த பாடலில் நான் வேலை செய்தேன். இந்த படத்துக்கு நிறைய நல்ல விஷயங்கள் அமைந்தன, நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்றார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன்.
அப்பாவியான, கியூட்டான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் திரு. கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவருடனும் இணைந்து நடிப்பதற்காகவே படத்தை ஒப்புக் கொண்டேன். ரெஜினாவும், நானும் ஒரே படத்தில் நடித்தாலும் சண்டை போட்டுக் கொள்ளாத நாயகிகள் என்றார் நாயகி வரலக்ஷ்மி.
கார்த்திக் சாரின் நண்பராக நடிக்க என்னை அழைத்தார்கள். அவரை பற்றி முழுமையாக தெரிந்தவன் என்பதால் அவருடன் இணைந்து நடிக்க முடிந்தது. படத்தின் இரண்டாவது பாதியில் நடக்கும் எதையுமே யூகிக்க முடியாத அளவுக்கு. திரைக்கதை அமைத்திருக்கிறார் திரு, பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார் இயக்குனர் அகத்தியன்.
இதற்கு முன் கௌதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். எதோதோ பாடல் ரெஜினாவுக்கு நிச்சயம் ரெஜினா ஆர்மி ஆரம்பிக்க வைக்கும். ஆடையில் மட்டும் தான் லோ பட்ஜெட், மற்றபடி பிரமாண்டமான படம் தான் இது. கார்த்திக் சார் வந்தவுடனே எல்லோருக்கும் முத்தம் கொடுப்பார், அதுக்காகவே லைன் கட்டி நிற்போம். சிரிக்கவும், அழவும் வைக்கும் படமாக வந்திருக்கிறது என்றார் நடிகர் சதீஷ்.
தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில சிறந்த தயாரிப்பாளர்களில் தனஞ்செயன் சாரும் ஒருவர். ஏதோதோ பாடலின் முக்கியத்துவத்தை எனக்கு விளக்கி, என்னை அதில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்ததே திரு தான். அந்த பாடல் வைரலாகி போய்க் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலக்ஷ்மிக்கும் எனக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை என்றாலும் படப்பிடிப்பில் எப்படியாவது சந்தித்துக் கொள்வோம். கார்த்திக் சாரோடு இணைந்து நடித்தது, அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டது மகிழ்ச்சி என்றார் நாயகி ரெஜினா கஸாண்ட்ரா.
ஒரு சினிமா எடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம், படத்தில் வேலை செய்யும் ஒருவர் நமக்கு ஆதரவாக இல்லையென்றால் கூட படம் முடிப்பது கஷ்டம் தான். படம் சிறப்பாக வருவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் திரு தான். அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மிகச்சிறப்பான படத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட 50 பேருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தோம், நல்ல வரவேற்பு கிடைத்தது. கார்த்திக் சாரை படத்துக்குள் கொண்டு வர முக்கிய காரணம் கௌதம் கார்த்திக். இந்த படத்தை உங்களுக்காக தான் பண்றேன் என சொல்லி உரிமையோடு நடிக்க வந்தார் வரலக்ஷ்மி. ரெஜினா நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு போக நிறைய வாய்ப்புகள் உள்ள படமாக இது அமைந்திருக்கிறது. மிகவும் திட்டமிட்டு வேலை செய்தோம், ஆனாலும் சில காரணங்களால் படம் தாமதமாகியது. ஆனாலும் ஜூலை 6ஆம் தேதி சிறப்பாக வர இருக்கிறது. 300 திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம், எல்லா ஊர்களிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக சாம் சிஎஸ்சின் இசையும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதிய, எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கியிருக்கிறோம். அதில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு மொபைல், வாட்ச் என தினமும் பரிசுகள் உண்டு. மேத்யூ, தியாகு என இருவரும் இந்த அப்ளிகேஷனை வடிவமைத்திருக்கிறார்கள் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
விழாவில் கலை இயக்குனர் ஜாக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஜெயலக்ஷ்மி, தயாரிப்பாளர் விக்ரம் குமார், ஒலி வடிவமைப்பாளர்கள் விஜய் ரத்னம், ரஹமத்துல்லா, நடிகர் மைம் கோபி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.