வைகை எக்ஸ்பிரஸ் திரை விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் “வைகை எக்ஸ்பிரஸ் ” சிறப்பு இரவு ரெயிலின் குளிர் சாதன வசதியுடைய பெட்டியில் பயணிக்கும் மூன்று இளம் பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அதில் பயணிக்கும் பிற பயணிகளுக்கு தெரிய வருகிறது. உடனே ரயிலை நிறுத்தி இரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அந்த மூன்று பெண்களில் ஒருவர்,துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா ,மற்றொருவர் தனியார் தொலைக்காட்சி நிருபர் கோமல் சர்மா , இன்னுமொருவர் தமிழக எம்.பி சுமனின் இளம் மைத்துனி . மேற்படி ,மூன்று இளம் பெண்களில், இரண்டு பேர் இரயிலிலேயே இறந்து போக , நீது சந்திரா மட்டும் மூளைச்சாவு அடைந்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இந்த கொலைகளை பற்றி துப்பு துலக்க முதலில் களம் இறங்குகிறார் சாதாரண இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நாசர் .ஒரு கட்டத்திற்கு மேல் அக்கொலை விசாரணை நகராது நின்றதால் , அதன் பிறகு அது பற்றி விசாரிக்க ரேக் எனும் ரெயில்வே சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரி ஆர்.கே.வை களம் இறக்குகிறார் தமிழகத்தை சேர்ந்த எம்.பி. சுமன் .ஆர்.கே. உடனடியாக அதே பெட்டியில் கொலை நடந்த அன்று பயணம் செய்த , கொடூர தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்பட்டு அவரை தேடிப் பிடித்து அரஸ்ட் செய்கிறார். ஆனால், ஆர்.கே தன் பாணியில் விசாரித்தும் .இந்த கொலைகளை தான் செய்யவில்லை… என்றதும் அந்த குளிர் சாதன பெட்டியில் உடன் பயணித்த மற்றவர்கள் மீது தனது சந்தேக பார்வையை செலுத்துகிறார் . இந்த கொலைகள் மற்றும் கொலை முயற்சிக்கான காரணத்தை பல தரப்பட்ட கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் அடுத்தடுத்து கிடைக்கிறது.

இறுதியில், அந்த இளம் பெண்களை கொன்ற குற்றவாளி யார்? அவன் ஒரே ஒருத்தன் தானா ..? வேறு பல பேர் குற்றவாளிகளா….? மூன்று கொலைகளையுமே செய்தது யார்..?

ஆர்.கே. துணிச்சலான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கொலையின் காரணங்களுக்கான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், குற்றவாளிகளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கும் வேளையிலும் நமக்குள்ளே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இரட்டை வேடங்களில் வரும் நீது சந்திரா, தனது வித்தியாசமான நடிப்பால் இரண்டையும்
வேறுபடுத்தி காட்டியுள்ளார். ஆர்.கே.வுடன் படம் முழுக்க வலம் வரும் மற்றொரு போலீஸ் அதிகாரியான நாசர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.

எம்.பியாக வரும் சுமன், நடிகையாக வரும் இனியா, ரயில்வே போலீசாக வரும் ஜான் விஜய், டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் சுஜா வருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, கதாசிரியராக வரும் மனோபாலா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் சமமான பங்களிப்பு கொடுத்துருப்பது படத்திற்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.