‘மம்மோன்’ (பேராசை) , ‘அசிமோடெஸ்’ (காமம்), ‘லேவியதன்’ (பொறாமை) ஆகிய மூன்றும் தான், துஷ்ட தேவதைகளில் மிக வலிமையான சைத்தான்களாக கருதப்படுகிறது….ஆனால் அந்த மூன்றுக்கும் வழிகாட்டியாக திகழ்வது லூசிபர் (கர்வம்) என்னும் சைத்தான்…. தற்போது அவை அனைத்தும் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி பிறக்க இருக்கின்ற புதிய ‘சைத்தான்’ (விஜய் ஆண்டனி) னை நினைத்து பயத்தில் தத்தளித்து கொண்டு இருக்கின்றது. அந்த சைத்தானை கட்டுப்படுத்தும் ஒரே சக்தி, மற்றொரு ‘சைத்தான்’ னாகிய இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு மட்டும் தான் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
சென்னை லயோலா கல்லூரியில் இயக்கம் சார்ந்த படிப்பை முடித்து விட்டு, தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படத்தில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி…. நெசவாளர்கள், மீனவர்கள், கொடைக்கானல் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் உடல்களை மீட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாறு, பொம்மலாட்டம் ஆகியவற்றை பற்றி அவர் எடுத்த ஆவண படங்கள் அனைத்தும், திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“ஒரு சிறந்த திரைப்படத்திற்கு ஆணிவேர், ஓர் சிறந்த நடிகர்…ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடிப்பதே அந்த சிறந்த நடிகரின் தனித்துவமான சிறப்பம்சம்…. அவர் தான் விஜய் ஆண்டனி சார். நடிப்பு என்றால் ‘சைத்தான்’ ஆக மாற கூடியவர் அவர். என்னுடைய முதல் படத்திலேயே அவருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.