அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில், ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பில் சிறந்ததொரு திகில் படமாக உருவாகி வரும் ‘ரம்’, தற்போது வர்த்தக உலகில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக உருவெடுத்து வருகிறது…. பிரபல விநியோகஸ்தர் ஏ பி ஸ்ரீகாந்த், ‘ரம்’ திரைப்படத்தின் தமிழ் உரிமையை ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ என்ற நிறுவனத்தின் சார்பில் பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.
ரெமோ திரைப்படத்திற்கு பிறகு அனிரூத் இசையமைக்கும் படம் ரம் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு வானளவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரம் திரைப்படத்திற்காக அனிரூத் இசையமைத்த ‘ஹோலா அமிகோ’ மற்றும் ‘பேயோபோபிலியா’ பாடல்கள் இசை பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ரம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட தொழில் நுட்ப வேலைகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
“கடந்த இருபது வருடங்களாக நாங்கள் பகுதி வாரியாக திரைப்படங்களை விநியோக செய்து வருகிறோம்…. திகில் கலந்த நகைச்சுவை படங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பிரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது….எனவே ரசிகர்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை தர வேண்டும் என்று எண்ணி நாங்கள் ரம் படத்தை தேர்வு செய்தோம். எங்களுக்கு இந்த ரம் திரைப்படம் சிறப்பான அடித்தளமாக விளங்கும் என முழுமையாக நம்புகிறோம். துள்ளலான இசையில் உருவான பாடல்களுக்கும், நெஞ்சை உறைய வைக்கும் திகில் காட்சிகளுக்கும் எங்களின் ரம் திரைப்படத்தில் எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது…அனிரூத் போன்ற முன்னணி இசையமைப்பாளர் கைகோர்த்திருக்கும் ரம் திரைப்படத்தில் நாங்கள் இணைவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….” என்று கூறினார் ஏ பி ஸ்ரீகாந்த்.