கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ என்னும் பொன் விழா நூலை வெளியிட்டார் ‘இசைஞானி’ இளையராஜா

காடும், காடு சார்ந்த நிலமும் தான் ஐந்திணைகளில் ஒன்றான  ‘முல்லைத்’ திணையின் சிறப்பு….. அதுபோல் கலையும், கலை சார்ந்த இலக்கியமும் தான் கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ நூலின் தனித்துவமான சிறப்பு.   ‘முல்லைச்சரம்’ கலை-இலக்கிய மாத இதழின் பொன்விழா மலர் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (14.10.16) அன்று சென்னையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது.  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கிய இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இசைஞானி இளையராஜா, இலக்கியச் சின்னம் குமரி ஆனந்தன்,  சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ந.கிருபாகரன், பெங்களூரு இஸ்ரோ மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,  முன்னாள் துணைவேந்தர் பொற்கோ ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
உலக கலை இலக்கிய வரலாற்றில் புதிய சாதனை படைத்த  ‘முல்லைச்சரம்’ பொன்விழா மலரை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட, கவிஞர் பொன்னடியார் கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை நீதிபதி ந.கிருபாகரனும், ‘பாரதிதாசன் உலகப் பெருங்கவிஞர்’ நூலை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும், ‘நினைவலைகளில் பாவேந்தர்’ நூலை குமரி ஆனந்தனும் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி , இந்த விழாவில் இந்தியாவின் பசுமை மனிதர் என்று அழைக்கப்படும் அப்துல் கனி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இலக்கியச் சின்னம் குமரி ஆனந்தன் உள்ளிட்ட  21 பேருக்கு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.