“இந்த உலகில் பைசாவிற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை,” என்கிறார் ‘பைசா’ படத்தின் கதாநாயகன் ஸ்ரீராம்.

‘கருவறையில் இருந்து கல்லறை வரை பைசா தேவை’. இருந்தாலும், பைசாவால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பைசாவை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது. இப்படி பைசாவினால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும் மக்களுக்கு உணர்த்த வருகிறது ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் ‘பைசா’ திரைப்படம். விஜயின் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இந்த பைசா திரைப்படத்தை இயக்க, ‘பசங்க’ புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கான்பிடண்ட் பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் ‘பைசா’ படத்தை தயாரிக்க, கராத்தே கே ஆனந்த் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

‘கோலி சோடா’ படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்ற நடிகர் ஸ்ரீராம், இந்த ‘பைசா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைக்கிறார். “பணமே வாழ்க்கையில்லை! பணம் இல்லாமலும் வாழ்க்கையில்லை! இது தான் எங்கள் ‘பைசா’ படத்தின் ஒரு வரிக்கதை. உணர்ச்சிகளால் சூழப்பட்ட ஒரு தனி மனிதனுக்கு கிடைக்காத மரியாதை, வெறும் காகிதத்தால் ஆன பணத்திற்கு அதிகளவில் கிடைக்கிறது. அந்த அளவிற்கு ‘பைசா’ மனிதனின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்து வருகிறது. குப்பை பொறுக்கும் இளைஞனாக இந்த ‘பைசா’ படத்தில் நான் நடித்துள்ளேன். அவன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், அவனை கடந்து போகும் ஒரு அழகிய காதல், எதிர்பாராத திருப்பங்கள் என பல சுவாரசியங்களுடன் உருவாகி உள்ளது ‘பைசா’ திரைப்படம்” என்கிறார் ‘பைசா’ படத்தின் கதாநாயகன் ஸ்ரீராம்.

நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த பைசா திரைப்படத்திற்கு K.P. வேல்முருகன் ஒளிப்பதிவாளராகவும், J.V. இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற இந்த பைசா திரைப்படமானது வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி வெளியாகிறது.