அப்போ ‘மெட்ராஸ் ஜானி’, இப்போ ‘டார்லிங் பாலாஜி’

தனது படபடப்பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் சினிமா காதலர்களின் உள்ளங்களை தட்டிச்சென்றவர் ‘மெட்ராஸ் ஜானி’ கதாப்பாத்திரத்தில் நடித்த ‘ஹரி’. வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு ‘மைம்’ கலைஞர். வசனங்கள் இல்லாமல் தங்கள் பாவனைகளை வைத்து பிறரை கவர்வதில் இவர் சிறந்தவர். குயிலோ, மயிலோ! சின்னதோ, பெரியதோ! தனக்கு கொடுக்கும் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரமாகவே மாறும் திறன் ஹரியிடம் உண்டு.

அதற்கு உதாரணம்தான், ‘அட்டக்கத்தி’, ‘மரியான்’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்கள். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அப்படிப்பட்ட ரசிகர்களின் மனதை வென்ற ஹரியை கண்டிப்பாக பாராட்டிதான் ஆக வேண்டும். தற்போது ‘டார்லிங் 2’ டிரெய்லரில் வரும் திக்குவாய் கதாப்பாத்திரம் வெகுவிரைவிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களை கவர்ந்துவிட்டது. “என்னுடைய ஜானி கதாப்பாத்திரம் மக்களின் மனதில் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பை பெற்று தந்தது; அதேபோல் இந்த பாலாஜி கதாப்பாத்திரமும் அமையும் என்று நம்புகிறேன். இந்த இரண்டு பாத்திரங்களும் முற்றிலும் வெவ்வேறு அம்சங்களை கொண்டது, என்னுடைய முழு திறமையையும் ‘டார்லிங் 2’ படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என்று புன்னகையுடன் விடை பெறுகிறார் ஹரி.