Today Crazy Mohan Birthday

10407407_854009237965986_2141197902007441276_n

 

இன்று காமெடி நடிகர், வசனகர்த்தா, நாடக கலைஞர் கிரேசிமோகனுக்கு பிறந்தநாள்…

தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் நாடக கலைக்கு உயிர் கொடுத்துவரும் ஒரு சிலரில் கிரேசியும் ஒருவர்.

இதுவரை 5000க்கு மேற்ப்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றிய திறமை சாலி. இன்னமும் கருத்து மோதல் அற்று கிரேசி கிரியேஷனில் ஒரு குடும்பமாக அவரது நண்பர்கள் நடித்து வருகின்றார்கள் என்றால் அதுதான் பெரிய விஷயம்.

கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இரண்டரை ரூபாய் டிக்கெட்டுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு பார்த்த படம்.

அந்த படத்தில் வில்லன் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும்.. தாடி வச்சவன் எல்லாம் தாகூரும் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் வின்ஸடன் சர்ச்சிலும் இல்லை என்று நாகேஷ் பேசும் வசனம் எனக்கு மிகவும் பிடித்து…

அதே போல ஜனகராஜ் பேசும்..

பாடியில அம்பு.. அம்பை யார் விடுவா?- ராஜா? மேக்சிமம் கவர் பண்ணிட்டேன் என்று அடித்து விடும் அலப்பறைகள்..
1990 ஆம் ஆண்டு தீபாவளிக்கு செமையான மழை… கடலூர் மாநகரமே தண்ணீரில் மிதக்க…

மைக்கேல் மதன காமராஜன்.. திரைப்படம் ரிலிஸ்.. இரண்டு ரூபாய் பெஞ்சு டிக்கெட்டில் சென்றால் பெஞ்சுக்கு கீழே தண்ணீர் குட்டையாக நின்றுக்கொண்டு இருக்க.. சம்மனம் போட்டு உட்கார்ந்து ஞானி போல கைதட்டி ரசித்த திரைப்படம்…

இந்த அவிநாசி ஒரு விசுவாசி..

ஐந்து லட்சம் வாங்கிகிட்டு கேட்சு மை பாயிண்டுன்னு சொல்றானே உன் பேராண்டான் என்று நாகேஷ் தவிப்பது..

இதே போல 1997 தீபாவளிக்கு அவ்வை சண்முகின்னு நினைக்கிறேன்….

பாண்டியன் இங்க இல்லை.. அதான் எனக்கு தெரியுமே.. உனக்கு எப்படி தெரியும்.. நீங்கதானே சொன்னிங்க என்றதும் ஓட்டவாய்டா பாண்டி… சான்சே இல்லை..

வீட்டில் இருந்து மணிவண்ணனும் கமலும் பேசிக்கொண்டு வரும் ஒரே ஷாட்…

எனக்கு கூச்ச சுபாவம் என்று மணிவண்ணன் சொல்லிக்கொண்டு ஹீராவோடு வழிவது என்று டயலாக்கில் பின்னி இருப்பார் கிரேசி சார்.

அவ்வை சண்முகியில் பெண் கேட்டு வந்த கமலிடம் ஜெமினி விஸ்வநாத ஐயர், என்று ஐயர் பெயரை சொல்லிக்கொண்டு வந்து அந்த வரிசையில் பாண்டி கேட்கவே நல்லாவா இருக்கு என்று சொல்லும் அந்த வசனம் அற்புதம்.

சதிலீலாவதியில் கோவை சாரளா… ஆம்பளைங்களுக்கு சான்சோ.,… சாய்சோ.. கொடுக்ககூடாது… என்னா ரெண்டுத்தையும் யூஸ் பண்ணிக்குவானுங்கோ…. என்று சொல்வது என்று எழுதிக்கொண்டே போகலாம்.

கிரேசி மோகன் நிறைய படங்களில் வசனம் எழுதினாலும்… அவர் கமல் படங்களில் மட்டுமே மிளிர்வார்… மற்ற இடங்களில் அவர் சட்டயர் ஒர்க் அவுட் ஆவது சற்று சிரமமே.
பட் திரைப்படங்களில் அவர் அறிமுகமாகும் முன்பே… கிரேசி தொலைகாட்சி மூலம் எனக்கு அறிமுகமாகி இருந்தார்…

ஒரு சின்ன பிளாஷ் பேக்…

கடலூர் கூத்தப்பாக்கத்தில் 1970 களில் மெயின் ரோட்டில் 30 குடும்பங்கள்தான் வசித்து வந்தன… ஆனால் மற்ற இடங்களில் எல்லாம் வயல்களில் நெல்லும், மல்லாட்டையும், மரவள்ளியும் பயிர் செய்யப்பட்டன…

முதல் முறையாக கூத்தப்பாக்கத்தில் நாகரீக வாழ்க்கை என்ற விஷயத்தை அறிமுகபடுத்திய பெருமை ஷங்கர் மேன்ஷனையே சாரும்…

வரிசையாக வத்திப்பெட்டி போல இருபுறமும் கீழே 20 வீடுகள்.. அதே போல மேலே 20 வீடுகள் என்று கட்டப்பட்டன…. முதல் அப்பார்ட்மென்ட் கூத்தப்பாக்கத்தில் சங்கர் மேன்ஷன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன…

அது என்னடா இது இந்த பக்கம் சமைக்கறானுங்க.. அப்படியே பத்தடி தாண்டி போனா பேலறதுக்கு கக்கூஸ் கட்டி வச்சி இருக்கானுங்க.. உவ்வே என்று அந்த அப்பார்ட்மென்ட் வாழ்க்கை எங்கள் ஊர்காரர்களால் பரிகாசம் செய்யப்பட்டது.
டிவிக்களும் அதிகம் இல்லாத ஊரில் அப்பாட்மென்ட்டில் குடி வந்த மேட்டுக்குடிகளிடம் பிளாக் அண்டு ஒயிட் டிவிக்கள் இருந்தன..

அதில் ஒரு வீட்டில் போர்ட்டபில் டிவியில் தூதர்ஷனில் கிரேசி கிரேசிசிசிசிசி கிரேசி என்று ஒரு பாடல் ஓடும்… அந்த வீட்டின் கதவு புறத்தில் நின்றுக்கொண்டு அந்த ஹீயர் ஈஸ் கிரேசி தொலைகாட்சி தொடரை பார்த்து இருக்கின்றேன்.. அந்த வீட்டில் உள்ள ஒரு கிழம் எந்த நேரத்திலும் டிவியை நிறுத்தி தொலையும் என்பதால் டிவியை நிறுத்திவிடக்கூடாது என்ற வெதுக்கலுடன் பார்த்த தொடர் அது.. ஆனால் அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்…

அதன் பின் சென்னை வந்து அப்பார்ட்மென்ட் வாழ்க்கைக்கு பழகி சரவணா வீடியோசில் சேர்ந்து கேமரா அசிஸ்டென்ட்டாக தொழில் கற்று எந்த ஊரர் வீட்டு டிவியில் வாசிலில் நின்று கிரேசி தொடர் பார்த்தேனோ.. அதே கிரேசி கிரியேஷனின் ஆஸ்த்தான டைரக்டர் எஸ்பி காந்தன் இயக்கத்தில் தொடர் பெயர் நினைவில்லை..

மயிலாப்பூரிலோ அல்லது மந்தவெளிப்பக்கம் ஏதோ ஒரு வீட்டில் அந்த தொடரின் படப்பிடிப்பி நடந்தது.. அதில் கிரேசி குருப்பில் அப்பா மோகன் இப்போது காமெடியில் புகழ் பெற்று இருக்கும் காமெடி நடிகர் சாம்ஸ் பெண் வேடமிட்டு இருப்பார்… அவரிடம் காதலை சொல்ல வழிந்து… போலோ கூஷ்மா போலோ போலோ சுஷ்மா போலோ என்று குதித்து குதித்து சென்று காதலை சொல்ல.. சாம்ஸ் நஹி நஹி என்று பெண்மையோடு ஓடும் காட்சியை என்றுமே என்னால் மறக்க முடியாது.. அதே போல நான் வேலை செய்த எந்த தொடரிலும் இப்படி காமெடியாக ரசித்து சிரித்து வேலை செய்ததே இல்லை.. அந்த தொடரில் வேலை செய்தேன்.. என்பது ஆண்டவனின் சித்தம்… எந்த டிவியை கதவு அருகே நின்று ரிசித்தேனோ.. அவர் வசனம் எழுதும் தொடரில் வேலை செய்வது எவ்வளவு பெரிய விஷயம்..

இன்று கிரேசி மோகனுக்கு 66 வயதாகின்றது… இன்னும் தமிழ் சினிமாவில் மென்மேலும் பல சாதனைகள் தொடர எல்லாம் வல்ல பரம்பொருளை ஜாக்கிசினிமாஸ் சார்பாக வேண்டிக்கொள்வோம்..வேண்டிக்கொள்வோம்.

 

 
வாழ்த்துக்களுடன்

ஜாக்கிசேகர்.

16-10-2015

Previous articleBest Movie review app CineBee
Next article10 Endrathukulla – Movie Review | Vikram, Samantha | D. Imman | Vijay Milton