நாம் ஒருவருக்கு செய்யும் உதவி, எதிர்பாராத நேரத்தில் நமக்கே உதவியாகத் திரும்பி வரும் என்ற அழகான கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘டெலிவரி பாய்’. லியோ சிவகுமார் நடிப்பில், ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கோயம்புத்தூரில் டெலிவரி பாயாக வேலை பார்க்கும் இளைஞன், அம்மாவுக்கு ஏற்படும் விபத்தால் பணத்திற்காகப் போராடுகிறான். அந்த நேரத்தில் ஒருவர் அவனுக்கு இரண்டு லட்சம் ரூபாய் உதவி செய்கிறார். பின்னர் சென்னையில் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் அந்த நபரைக் காப்பாற்ற கதாநாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் மீதிக்கதை.
‘நான் மகான் அல்ல’ படத்தின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும், சுவாரஸ்யமான திரில்லர் கதைக்களம் படத்திற்குப் பலம். ஆனால், திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லியிருக்கலாம். சில இடங்களில் காட்சிகளின் பிரசன்டேஷன் சற்றுத் தடுமாறுகிறது.
லியோ சிவகுமார் நன்றாக நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார் அம்மாவாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரிகிடா சாகா மற்றும் மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.
குறிப்பாகக் கடைசி இருபது நிமிடங்கள் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் சுவாரஸ்யமாக நகர்கின்றன. இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான திரில்லராக வந்திருக்க வேண்டிய படம். இருந்தாலும் நல்ல கருத்தையும் உணர்வையும் கொடுக்கும் ஒரு சுமாரான நல்ல திரைப்படம் இந்த ‘டெலிவரி பாய்’.

