RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் மற்றும் டார்லிங் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசம், அன்பு மற்றும் பிரிவின் வலியை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
டீசரில், “அடுத்த ஜென்மத்துலயும் நான் தான் உனக்கு அப்பா ஆகணும்” என பாசத்துடன் தந்தை கூறும் காட்சியும், அதைத் தொடர்ந்து பிரிந்து போக நினைக்கும் அப்பாவை தடுத்து மகன், “அடுத்த ஜென்மத்துலயும் நீங்க தான் எனக்கு அப்பான்னு உறுதி கொடுத்துட்டு போங்க” என கெஞ்சும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இந்த உணர்வுப்பூர்வமான காட்சிகள் அப்பா–மகன் உறவின் அழகையும், பிரிவின் வலியையும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.
அம்மாவின் பாசத்தையும் தியாகத்தையும் கொண்டாடும் அளவுக்கு அப்பாவின் அன்பும், தியாகமும், வலியும் அதிகமாக பேசப்படுவதில்லை. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில், ஒரு தந்தையின் பெருமையையும், மகனுடனான அவரது அழகான உறவையும் மையமாக வைத்து ‘ஃபாதர்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இராஜா மோகன், இந்தப் படத்தை உணர்வுகளுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். டீசரில் இடம்பெறும் காட்சிகள், திரைப்படம் அப்பா–மகன் உறவை எந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக கையாள்கிறது என்பதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ‘கப்சா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் தயாரிப்பாளர் R. சந்துரு இப்படத்தை மிகப்பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.
இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான படத்தின் தீம் மியூசிக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் முழு இசை வெளியீடும் நடைபெறவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பிரகாஷ் ராஜ் மற்றும் டார்லிங் கிருஷ்ணா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், இவர்களின் திரை உறவு இப்படத்தின் முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டீசரில் இடம்பெற்றுள்ள அப்பா–மகன் பாசக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
தயாரிப்பாளர்கள் R. சந்துரு மற்றும் யமுனா சந்திரசேகர் தயாரிக்கும் இப்படத்திற்கு சுகுணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநாத் A படத்தொகுப்பையும், ஸ்ரீகாந்த் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். தயால் பத்மநாபன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அப்பாவின் அன்பையும், தியாகத்தையும், மகனுடனான உறவின் ஆழத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முழு திரைப்படம் இந்த உறவை எந்த அளவுக்கு மனதை நெகிழ வைக்கும் வகையில் பதிவு செய்யப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடிப்பு: பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா
தயாரிப்பு: R. சந்துரு, யமுனா சந்திரசேகர்
இயக்கம்: இராஜா மோகன்
நிர்வாக தயாரிப்பு: தயால் பத்மநாபன்
ஒளிப்பதிவு: சுகுணன்
இசை: நகுல் அப்யங்கர்
படத்தொகுப்பு: ரகுநாத் A
கலை இயக்கம்: ஸ்ரீகாந்த்
இசை வெளியீடு: ஆனந்த் ஆடியோ

