திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும்.
அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்து கன்னடத்தில் ஒரு படம் வெளியாகிறது. ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்பது படத்தின் பெயர்.
இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணி கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட்.
இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்து படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார்.
பட அனுபவம் பற்றி ஷாம் பேசத்தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது ,
” நான் ‘6 ‘படம் வெளியான பிறகுதான் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன; வருகின்றன.
இப்போது நான் நடித்துள்ள கன்னடப் படம் ‘ஸ்ட்ரெய்ட் பார்வர்ட்’ தீபாவளியன்று வெளிவருகிறது. கன்னடத்தில் இது எனக்கு மூன்றாவது படம். இயக்கியிருப்பவர் மகேஷ் ராவ். ஒளிப்பதிவு ஆண்ட்ரூ. தயாரிப்பு கே . மஞ்சு.
இந்த ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ படத்தில் என் பாத்திரம் அப்படி ஒரு அதிரடியாக அசத்தலாக வந்திருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் மோஸ்ட் பவர்புல் ரோல் இது தான் என்பேன்.
சமீபத்தில் ‘புறம்போக்கு’ வரை காக்கிச்சட்டை போட்டு போலீஸ் வேடங்களில் தோன்றி வந்த எனக்கு, இதில் மாறுபட்ட வேடம். இதில் நான் ஒரு கேங்ஸ்டராக வருகிறேன்.. தேவ் என்பது என் பாத்திரத்தின் பெயர். தனியாக எனக்குத் தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும் . ‘தனி ஒருவன்’ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.
இப்படத்துக்காக பெங்களூர், ஹைதராபாத் என்று நடந்த படப்பிடிப்பு வெகு மகிழ்ச்சியாக இருந்தது ” என்று சற்றே நிறுத்தியவர், படத்தின் நாயகன் யஷ் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
“இதுவரை நான் சேர்ந்து நடித்தவர்களில் யஷ் சிறந்த கோ ஆர்ட்டிஸ்ட் என்பேன்.
பொதுவாக நடிப்பவர்கள் தன் பாத்திரம், தோற்றம், ஸ்டைல்,உடைகள்,வசனங்கள், நடிப்பு போன்றவை தங்களுக்கு மட்டும் நன்றாக சிறப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; நினைப்பார்கள். ஆனால் யஷ் மாறுபட்டவர். அவருக்கு படத்தில் எப்படி முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே போல எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
தன் நாயகன் பாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் எதிராளியான வில்லன் பாத்திரமும் நன்றாக வர வேண்டும் என விரும்பினார். உங்களிடமுள்ள பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்று என்னை நன்றாக ஊக்கப்படுத்தினார். நடிப்பதற்கு எனக்கான இடத்தை விரிவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்தார்.
படம் முழுக்க எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. படப்பிடிப்பில் எனக்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி யஷ் சொல்வார் ஷாம் உங்களுக்கு இன்னமும் சரியான ரோல் தமிழில் அமையவில்லை ., யாரும் உங்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பார் .எனக்கு வேறு மொழிகளில் வந்த “கிக்’, ‘ரேஸ் குர்ரம்’ போன்ற படங்கள் எல்லாமே என் , ‘6’ படம் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கின்றன. இந்தப்படமும் அப்படித்தான் வந்தது.
என்று கூறுகிற ஷாம், தமிழில் ‘காவியன்’ என்கிற படத்தில் நடித்து வருவதாகவும் தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
விடைபெறும் முன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் கூறினார்!