நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.
மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் K.குமார், இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, ரோஷினி ஹரி ப்ரியன், பிரிகிடா, ரேவதி ஷர்மா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன், கலை இயக்குநர் துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ, திரைப்பட விநியோகிஸ்தர் பைவ் ஸ்டார் K. செந்தில், பாடலாசிரியர்கள் சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்,
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், ”
இந்த நிகழ்வில் வடிவுக்கரசி அவர்களின் பேச்சு பிரமாதமாக இருந்தது. அவருடைய பேச்சில் ஒரு இயக்குநர் படப்பிடிப்பு தளத்தை எவ்வளவு உற்சாகமாக .. சௌகரியமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. வெற்றிமாறன் செந்தில்குமாரை பற்றி சொல்லும் போது சக மனிதர்களை நேசிக்கும் மிக இனிமையான மனிதர். நல்லவர் வல்லவர் எனக் குறிப்பிட்டார். இதனால் விரைவில் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
விடுதலை படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் பல உயரங்களை தொடுவார். இதற்கு இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்த இயற்கையும் கடவுளும் அவருக்கு துணையாக இருக்கும் என்ற வசனங்களே சான்று. அவருடைய அடுத்தடுத்த படங்களும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூரியைப் பார்த்து மிகவும் நான் ரசிக்கிறேன். நம் மண்ணுக்கேற்ற முகம். கருப்பான அழகன். மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில்,
” படத்தின் முன்னோட்டம், பாடல் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ ஆகிய படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு புன்னகையுடன் தான் வேலை செய்வார். யாரையாவது திட்ட வேண்டும் என்றாலும் கூட சிரித்துக் கொண்டே தான் திட்டுவார். அவரின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் கருடன் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.நானும் சூரியைப் போல் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு விரைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன்.
நடிகர் சூரி பேசுகையில்,
”இந்த தம்பிக்காக வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், அனைத்து அண்ணன்களுக்கும், தம்பிகளுக்கும் நன்றி. இதுபோன்றதொரு மேடை மீண்டும் அமையுமா? என தெரியாது எனக்கு அமைந்திருக்கிறது. இதுவே பதட்டமாக இருக்கிறது. இந்த மேடை இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன். விடுதலைக்கு முன் – விடுதலைக்கு பின் என இந்த சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த நேரத்திலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று உரிமையுடன் நிற்கிறேன் என்றால்… பெருமிதத்துடன் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால்.. அதற்குக் காரணம் வெற்றி அண்ணன் தான். விடுதலை படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களால் தான் இந்த கருடன் படமே உருவானது. அதுதான் உண்மை.
விடுதலை படத்திற்குப் பிறகு வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தால் அவர்கள் எப்படி இயக்குவார்கள் என்பது எனக்கு நிச்சயமாக தெரியாது. என்னை அவர்கள் கதாநாயகனை தான் பார்ப்பார்கள். தனுஷ் சார் ஒரு படத்தில் ‘என்னையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பார்க்கத்தான் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று சொல்லி இருப்பார். ஆனால் என்னை ‘பார்க்க பார்க்க பார்க்க பார்க்க தான் பிடிக்கும்’ ஆனால் நான்கு படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், வெற்றிமாறன் கேட்டுக்கொண்டதற்காக படப்பிடிப்பு தளத்தில் வருகை தந்து பணியாற்றினார். படப்பிடிப்பின் போது அவருடைய நேர்த்தியான உழைப்பு எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்தேன். அதேபோல் படப்பிடிப்பு தளத்திலும் என்னை சௌகரியமாக பணியாற்ற அனுமதி அளித்தார் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.