அறம் எண்டர்டெயின்மெண்ட், ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார்
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ மற்றும் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு கதை எழுதி அனுபவம் பெற்றவருமான ராகவ் மிர்தாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தை பற்றி பேசிய இயக்குநர், “காதல் என்றால் வெறும் ஆண் பெண் கவர்ச்சியா இல்லை அதையும் தாண்டிய ஒரு உணர்வா என்னும் கேள்விக்கு விடை தேடும் ஒரு ஜனராஞ்சசகமான ரொமாண்டிக் திரைப்படமே ‘காலங்களில் அவள் வசந்தம்’,” என்றார்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.