புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீஜா, வளர்ந்து வரும் நடிகைகளில் ‘இயல்பாக நடிக்கத் தெரிந்தவர்’ என மீடியாவால் பாராட்டப்படுபவர். தமிழ்ப் பெண்ணான தனக்கு தமிழ் சினிமாவில் உரிய இடம் வேண்டும் என உரிமையாகக் கேட்டு வருபவர்.
இப்போது சாரல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொள்ளக் காரணம் கேட்டபோது, ‘ப்ரியங்கா என்ற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள் இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீ ஜா-வாகிவிட்டேன்.
இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்றார்கள்.
நான் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சாரல். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்காகக் காத்திருக்கிறேன்.
இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ரீங்காரம் படம் ஷூட்டிங் முடிந்து, இறுதிக் கட்ட வேலைகள் நடக்கின்றன. இன்னொரு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இவை தவிர இன்னும் சில படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதையைப் பொறுத்து முடிவு செய்யலாம் என காத்திருக்கிறேன்.
நான் நடிக்கவிருக்கும் திருப்பதி லட்டு படம் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது,” என்றார்.
பெயர் மாற்றம் ஸ்ரீ ஜாவுக்கு கோலிவுட்டில் பெரிய இடத்தைப் பெற்றுத் தர வாழ்த்துவோம்!