சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. இந்த படத்தை ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லக்ஷ்மன், ‘டாடி’ சரவணன், பேபி மோனிக்கா மற்றும் சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில், ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா, இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, கலை இயக்குநராக எம் லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக முத்தமிழ் மற்றும் உமா தேவி ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
‘கட்டப்பாவ காணோம்’ – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு திரைப்படம். ஒரு அறிமுக இயக்குநரோடு இணைந்து பணியாற்றுவதில் பொதுவாகவே எல்லா கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஆனால் என் மீதும், என் கதை மீதும் முழு நம்பிக்கை வைத்து, தங்களின் முழு ஒத்துழைப்பையும் கொடுத்த சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் என்னுடைய தயாரிப்பாளர்கள் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு மீனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இந்த ‘கட்டப்பாவ காணோம்” என்று கூறினார் இயக்குநர் மணி சேயோன்.
“சிலர் தாங்கள் வளர்க்கும் நாய் அல்லது பூனையை அதிர்ஷ்டமாக கருதலாம்; இன்னும் சிலர் தாங்கள் உடுத்தும் குறிப்பிட்ட நிற ஆடையை அதிர்ஷ்டமாக கருதலாம். அந்த வகையில், எனக்கு இந்த கட்டப்பாவ காணோம் திரைப்படம் என் வாழ்க்கையில் அமைந்த மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம். ஏனென்றால், இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் எனக்கு இந்தி திரையுலகில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் கட்டப்பாவ காணோம். நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் கவரக்கூடிய ஒரு திரைப்படமாக இந்த கட்டப்பாவ காணோம் இருக்கும் ” என்று உற்சாகமாக கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
“இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் மணி சேயோன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை என்பதால், அவரோடு நடிக்க முதலில் எனக்கு பதட்டமாக தான் இருந்தது. முந்தைய படங்களில் பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செய்து நடித்த எனக்கு, இந்த படத்தில் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மீன் இருந்தும் கதா நாயகி ஐஸ்வர்யாவுடனும் ரொமான்ஸ் செய்ய வாய்ப்பு கிடைத்தது. முதலில் காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமாக தான் இருந்தது. ஆனால் அவருடைய சகஜமாக பழக கூடிய குணம், என்னை அந்த பதட்ட நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டது. இந்த படம் குழந்தைகளுடன் பெரியவர்களும் உற்சாகமாக பார்க்க கூடிய ஒரு படமாக இருக்கும்” என்று கூறினார் சிபிராஜ்.