மனிதர்களின் நிறத்தை தோலுரிக்கும் படம் – நிறம் மாறும் உலகில்

இயக்கம் – பிரிட்டோ ஜெ பி
நடிகர்கள் – பாரதிராஜா , சாண்டி மாஸ்டர், யோகி பாபு, வடிவுக்கரசி
இசை – தேவ்பிரகாஷ்
தயாரிப்பு – சிக்மா புரோடக்சன்

பல கதைகளை தனித்தனியாக ஆந்தாலஜி வடிவில் ஒரு கருவை மையமாக வைத்து வந்திருக்கும் படம் தான் நிறம் மாறும் உலகில்.

நிமிடத்துக்கு நிமிடன் நிறம் மாறும் உலகில், தாயின் பாசம் மட்டும் மாறுவதில்லை இது தான் படத்தின் கரு.

அம்மாவிடம் கோபப்பட்டு பிறந்தநாளில் ரயிலேறும் இளம்பெண், அவளிடன் அம்மாவின் அருமை பற்றி புரிய வைக்க தான் சந்தித்த மனிதர்களின் கதை சொல்கிறார் டிடிஆர். அப்படியே நான்கு கதைகள் விரிகிறது.

ஒரு காதல் ஜோடி குடும்பத்திற்காக பயந்து ஊரை விட்டு ஓடிப்போய், மும்பை தாதா ஒருவரிடம் சிக்குகிறார்கள். தாதா கை காட்டுகிற ஒருவரை கொலை செய்தால்தான் அங்கிருந்து அவர்களால் தப்பிக்க முடியும் என்கிற கட்டாயத்தில் இருக்கின்றனர், இது ஒரு கதை

தன் தாய்க்கு நேர்ந்த பரிதாப முடிவால் கொலைகாரனாகி படிப்படியாக ஊரே பார்த்து நடுங்கும் தாதாவாக மாறிப்போன ஒருவர், தாய்ப் பாசத்தை பாலியல் தொழிலாளியிடமிருந்து எதிர்பார்க்கிறார், இது ஒரு புறம்

கல்லூரி மாணவன் ஒருவனுக்கு, தான் வசிக்கும் பகுதியின் ரவுடிப் பேர்வழி சொல்கிற பெரிய குற்றத்தைச் செய்தால்தான் கேன்சர் பாதித்த தன் அம்மாவை காப்பாற்ற முடியும் என்கிற நிலையில் இருக்கிறான், இதுவும் ஒரு கதை,
ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் ஒருவருக்கு தன் அம்மாவைக் கழட்டி விட்டால்தான் காதலியை கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்கிற நிலையில் ஒருவர் இருக்கிறார்,

இப்படி சூழ்நிலைக் கைதியான மனிதர்களின் அடுத்தடுத்த நாட்கள் எப்படி நகர்கிறது என்பதே கதையோட்டம்…

இந்தப் படத்தில் ஊர் மக்களின் பயமுறுத்தலுக்கும் தாதாவின் மிரட்டலுக்கும் ஆளாகி அடிபட்டு ரத்தம் சிந்துகிற கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் மற்றும் காவ்யா அறிவுமணி நடித்துள்ளனர், பின் பாலியல் தொழிலாளியின் மடியில் படுத்தபடி தன் அம்மாவை நினைத்து கண் கலங்குகிற கதாபாத்திரத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார், பிள்ளைகள் கைவிட்ட நிலையில் பரிதாபத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளனர் பாரதிராஜா மற்றும் வடிவுக்கரசி ஆகிய இருவரும்,

அம்மாவுக்காக கொலை செய்யத் துணிகிற ரியோராஜ், நண்பனின் அம்மாவை தன் அம்மாவாக நினைத்து பாசம் காட்டுகிற கதாபாத்திரத்தில் விக்னேஷ்காந்த்,

தன் ஆட்டோவில் பயணியாக வந்தவர் தன்னைப் போலவே உறவுகள் இல்லாதவர் என்பதை அறிந்து அவரை அம்மாவாக ஏற்றுக்கொண்டு அரவணைக்கிற, அந்த அம்மாவுக்காக காதலியை எதிர்க்கிற கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் அந்த அம்மாவாக துளசி நடித்துள்ளார்,

இத்தனை நடிகர்கள் இருந்ததால் அத்தனை பேரின் நடிப்பிலிருந்தும் கதைக்குத் தேவையான பங்களிப்பு சரியாய் கிடைத்திருக்கிறது.

படம் முழுக்க சோகமும் அழுகையும் நிரம்பியிருக்க, அந்த மூடுக்கேற்ற பின்னணி இசையை தந்திருக்கும் தேவ்பிரகாஷ், ‘ரங்கம்மா’ பாடலில் உற்சாகத்தை பெருமளவில் ஏற்றியிருக்கிறார்.

மும்பை, மீனவ கிராமம், சென்னையின் பரபரப்பு என சம்பவங்கள் நடக்குமிடங்களை தங்கள் கேமரா பார்வையால் கதைக்கு நெருக்கமாக்கியிருக்கிறது மல்லிகா அர்ஜுனன், மணிகண்ட ராஜா கூட்டணி.

இயக்குநர் பிரிட்டோ ஜெ பி பிள்ளைகளுக்கும் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை, அதிலிருக்கும் சிக்கல்களை மையப்படுத்திய கதைக்களத்தை கையிலெடுத்து சமூகத்துக்கு தேவையான கருத்துகளை கூறியுள்ளார், இந்தப் படம் அனைத்து விதமான உணர்வுகளையும் நம்மிடம் சொல்கிறது.

ஆனால் படம் முழுக்க பரவியிருக்கும் சோகம் நம்மை அயர்ச்சி அடைய வைக்கிறது.

விளிம்பு நிலை மனிதர்களின் வலிகளை பிரதிபலிக்கும் படங்களின் வரிசையில் இந்த ‘நிறம் மாறும் உலகில்’ படமும் இடம் பிடித்துள்ளது சிறப்பு