3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.
இந்த நிகழ்வில்,
ஜி. தனஞ்ஜெயன் பேசியதாவது,
” இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. நான் தினமும் நிறைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் தொடர்ந்து பார்த்தேன். இந்த படத்தை பார்த்தவுடன் இயக்குநர் சிவாவின் நம்பிக்கை தெரிந்தது. இந்தப் படத்தை பற்றி அவர் என்னிடம் பேசும் போது இந்த திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள் என்று தான் கேட்டார். ஒரு படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும் என்றார். நானும் அவரைப் போல் சினிமாவை நேசிப்பதால் இதற்கு என்னாலான உதவிகளை செய்ய சம்மதித்தேன். இந்தப் படத்திற்காக நான் சில ஆலோசனைகளை வழங்கிய போது எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தார். இந்தப் படத்தை பார்க்கும் போது.. மக்களுக்கு தேவையான விசயத்தை தான் இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்பதை அனைவரும் உணர்வீர்கள். இந்தத் திரைப்படத்தை வெகுவிரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் வெற்றி பேசியதாவது,
” ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் – தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசியதாவது,
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஓம் நமச்சிவாய’ என்ற பாடல் ஒலித்தது. ஓம் நமச்சிவாய என்றவுடன் அது ஆன்மீகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அதை ஒரு கமர்ஷியல் ரிதமாக மாற்றி இசையமைத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா. இதையே பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் என்றால் படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக உருவாக்கி இருப்பார். அதனால் இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன். அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.சேவை மனப்பான்மையுடன் திரைத்துறைக்கு வருகை தந்திருக்கும் சிவா வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.