சல்மான்கான் ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’ படங்களுக்கு ரசிகன் !!

 

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

இம்மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” கேரளாவில் இருந்து கிளம்பி தமிழ் திரையுலகத்திற்கு வருகை தந்து, இந்த திரைப்படத்தை இந்த குழு உருவாக்கி இருக்கிறது. இதற்காக முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் இயக்குநர் சினு என்னை சந்தித்து, ‘பிரபுதேவா மாஸ்டர் – பாட்டு, அடி, ஆட்டம், ரிப்பீட்டு’ என சொன்னதுடன் மியூசிக்கல் என்டர்டெய்னர் எனக் குறிப்பிட்டார். இதை சொல்லும்போது சுவாரசியமாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெற்ற கொண்டிருந்த தருணத்தில்.. இசைப்பணியும் நடைபெற்றது. படத்திற்கு அந்தந்த தருணங்களில் பாடல்கள் அவசியம் என்று சூழல் உருவானது. அதற்காக இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டு இருந்தோம். படத்திற்கு பின்னணி யிசையையும் நிறைவு செய்து இருக்கிறேன். அதில் ஏராளமான திரைப்பட பாடல்கள் சின்ன சின்னதாக இடம் பிடித்திருக்கிறது. லைட் ஹார்ட்டட் ஃபிலிமாக உருவாக்கியிருக்கிறது. இந்த திரைப்படம் இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவு தேவை.

நான் பிரபுதேவா மாஸ்டரின் ரசிகன்.‌ அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி. வேதிகா மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், ” இந்நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநரும் மேடையில் பேசினார்கள். ஒருவர் தமிழிலும், மற்றொருவர் மலையாளத்திலும் பேசினார்கள். அவர்களின் பேச்சு அனைவருக்கும் புரிந்தது. இதற்காக அவர்கள் இருவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன்.‌ நான் எழுதிய பாடலுக்கான காட்சியாக்கம் வியப்படையச் செய்தது.

இயக்குநர் சினு அற்புதமான மனிதர்.‌ அவருக்கு முழுமையாக தமிழ் தெரியவில்லை என்றாலும்… பாடல் வரிகளை ரசித்தார். அவருடைய ரசனையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

இசையமைப்பாளர் இமானின் தொடக்க காலகட்டத்தில் இருந்து அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். எல்லா விதமான பாடல்களையும் வழங்கி தமிழ் திரையுலகில் இன்று மிக முக்கியமான இடத்திற்கு உயர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து தொடர்ந்து பாடல் எழுத வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது.

பிரபுதேவா மாஸ்டர் நடித்த ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற படத்தில் தான் அவருக்காக பாடலை எழுதத் தொடங்கினேன். நடிகராக இருந்த அவர் இயக்குநராக உயர்ந்த பிறகும்.. அவர் நடன இயக்குநராக பணியாற்றும் படங்களிலும்.. என ஏராளமாக பாடல்களை எழுதியிருக்கிறேன்.

வெகு சில நடிகர்கள் மட்டும்தான் பாடல்கள் குறித்து பாடலாசிரியருடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.‌ அதில் பிரபு தேவா மாஸ்டர் முக்கியமானவர். அவருக்கு பாடலாசிரியர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய ஏனைய பாடலாசிரியர்களான மதன் கார்க்கி, மணி அமுதவன், பார்வதி மீரா ஆகியோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.‌ ” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், ” இயக்குநர் சினு படப்பிடிப்பு தளத்தில் மிக வேகமாக பணியாற்றினர். ‘பேட்ட ராப்’- 90களில் இந்தியா முழுவதும் ஒலித்த பாடல். பேட்ட ராப் ஒரு வெற்றிகரமான வார்த்தை. முப்பது ஆண்டு கழித்து அந்த வார்த்தையை தலைப்பாக கொண்டு ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

பிரபுதேவா முப்பது ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் என்றால்.. அது மிகப்பெரிய விசயம். அவருடைய நடனத்தின்போது ரசிகர்கள் அவருக்கு எலும்பு இருக்கிறதா? இல்லையா? என பேசிக்கொள்வார்கள். இப்போது வரை எலும்பு வளரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவரிடம் ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு மாற்றம்.. அவருடைய தாடியில் நரை தென்படுகிறது. ஆனாலும் அவர் ஆற்றலுடன் நடித்தும் வருகிறார். நடனமாடியும் வருகிறார்.

பிரபுதேவாவின் அறிமுகம் எளிதாக இருந்தாலும்.. அவருடைய இன்றைய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கடின உழைப்பும், திறமையும், தொழில் மீதான பக்தியும் தான் காரணம்.‌

அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட ராப் எனும் திரைப்படத்தில் அவருடைய ஆற்றலும், திறமையும் நிறைந்திருக்கும். அதனால் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும்.‌

தற்போது வெளியாகும் திரைப்படங்களில் நிறைய வன்முறை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது.‌ ஆனால் இது போன்ற படங்களில் இருந்து ‘பேட்ட ராப்’ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கலகலப்பான காமெடி …அதிரடி சண்டை காட்சி… இனிமையான பாடல்கள்.. என எனது அற்புதமான கமர்சியல் கலவையுடன் தயாராகி இருக்கிறது. பிரபுதேவா மாஸ்டருக்கு ஏற்ற வகையில் கதையும் இருக்கிறது.‌ இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் தயாரிப்பாளர் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

நடிகை சன்னி லியோன் பேசுகையில், ” இந்த படத்தில் நடனமாடுவதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடியது மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை வேதிகா பேசுகையில், ” நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் இந்தப் படத்தில் நிறைய பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதுவரை நடிப்புத் திறமை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் தான் நாட்டியமாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பிரபு தேவா மாஸ்டர் உடன் இணைந்து நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

எனக்கு பிரபு தேவா உடன் இணைந்து நடிக்க வேண்டும்… நடனமாட வேண்டும்… என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது.

நான் பிரபு தேவா நடனமாடி வெற்றி பெற்ற பாடல்களை மும்பையில் மேடையில் ஆடியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும், நடனமாடியதும் மறக்க இயலாத தருணங்கள். அதற்காக நிறைய முறை ஒத்திகை பார்த்தேன்.

நான் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்கிறேன் என்றதும் என்னுடைய வட இந்திய நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஏனெனில் பிரபு தேவா சர்வதேச அளவிலான புகழ்பெற்ற அடையாளம். அதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்திற்கு என்ன தேவையோ அதனை தாராளமாக வழங்கி படத்தின் தயாரிப்பு தரத்தை உயர்த்தி இருக்கிறார் தயாரிப்பாளர் ஜோபி பி சாம்.

இயக்குநர் சினு.. ஒவ்வொரு காட்சியை திரைமொழியாக உருவாக்கும் போது தனக்கான தனித்துவமான பாணியை பின்பற்றுகிறார்.‌ அதனை படப்பிடிப்பு தளத்தில் உணர முடிந்தது. அவருக்கு இந்தப் படம் பெரிய வெற்றியை அளிக்கும்.

இந்த திரைப்படத்தில் இசை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.‌ இசையமைப்பாளர் இமானும் இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார். அற்புதமான பாடல்களையும், நடனத்திற்கான இசையை வழங்கியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 27 ஆம் தேதி என்று வெளியாகும் ‘பேட்ட ராப்’ படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில், ” இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது. ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, பக்ஸ், வையாபுரி, ஜே பி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷமாக இருந்தது.

இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன். அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.

நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன்.

பாலிவுட் நடிகர் சல்மான்கான் ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாமா..? என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் ‘பேட்ட ராப் ‘ படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக நேர்த்தியாகவும் , திறமையாகவும் திட்டமிடுகிறார். பயங்கர புத்திசாலி. அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தால் உச்சம் தொடுவார்.‌

இந்தப் படத்தில் இயக்குநரும், கதாசிரியர் தினிலும் இணைந்து உருவாக்கிய திரைக்கதை எனக்கு பிடித்திருந்தது. நான் லீனியர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் மிகச் சிறந்த நண்பர்கள். அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், பயணிக்கவும் விரும்புகிறேன்.

நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா..! அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

செப்டம்பர் 27ஆம் தேதியன்று ‘பேட்ட ராப்’ வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.