“மின்னல் முரளி” மற்றும் “2018” ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமா தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்தார் டோவினோ தாமஸ். அவரின் அடுத்த படமான “ARM” ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கி உள்ளார். “ARM” படம் முழுக்க முழுக்க 3Dயில் தயாராகி, மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக மாறி உள்ளது. இந்த படம் பற்றி அறிவிப்பு வெளியானதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த ட்ரெய்லரில் பூமியை ஒரு எரியும் சிறுகோள் தாக்கி பெரிய வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த காட்சியுடன் ட்ரைலர் தொடங்கி ஒரு வயதான பெண்மணி மணியனின் கதையை சொல்கிறார். அதன்பிறகு படத்தில் உள்ள பல சுவாரஸ்ய காட்சிகள் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளது. 2 நிமிடம் 33 வினாடிகள் கொண்ட இந்த ட்ரைலரின் மூலம் “ARM” படம் 1900, 1950 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் வடக்கு கேரளாவில் நடைபெறுகிறது என்பது நமக்கு புரிகிறது. டோவினோ தாமஸ் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
டிரெய்லரின் ஒவ்வொரு பிரேமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, கேரளாவின் செழுமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில் ஒரு காவிய கதையின் ஒரு தோற்றத்தை வழங்குகிறது. மேலும் “ARM” படத்தில் நிறைய அழுத்தமான காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. டோவினோ தாமஸ் தனது 50வது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று பல புதிய முயற்சிகளை எடுத்து இருப்பது ட்ரைலர் பார்க்கும் போது நமக்கு தெரிகிறது. பல அதிரடி காட்சிகளை கொண்டுள்ள இந்த படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். ஜோமோன் டி. ஜானின் அருமையான ஒளிப்பதிவு, “கந்தாரா” புகழ் விக்ரம் மூர் மற்றும் பீனிக்ஸ் பிரபு ஆகியோரின் சண்டைக்காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன.
கிருத்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி ஆகியோர் நடித்துள்ளனர். சுஜித் நம்பியார் திரைக்கதை எழுத, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். சிறந்த பின்னணி இசை, உயர்மட்ட VFX மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகள் என “ARM” இந்திய சினிமாவில் ஒரு முக்கிய படமாக மாற உள்ளது. கேரளாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் இப்படம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் “ARM” படம் செப்டம்பர் 12, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. கன்னட வெளியீட்டை ஹோம்பலே ஃபிலிம்ஸ், தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இந்தியில் அனில் ததானியின் ஏஏ பிலிம்ஸ் ஆகியோர் வெளியிடுகின்றனர்.