வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இயக்குநர் B.ராமச்சந்திரன் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காக தான் என்றாலும், என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தேன், காரணம் நீங்கள் தான் முதல் நீதிபதி, அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்லப் போறீங்க. அந்த வகையில், என் படத்தை பார்த்துவிட்டு, “தம்பி நல்லா பண்ணியிருக்கீங்க” என்று தட்டிக்கொடுத்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. உங்களால் தான் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது, அதனால் முதல் நன்றி உங்களுக்கு தான்.
நடிகர் பாலசரவணன் பேசுகையில், “பேச்சி படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த போது நாங்கள் எதிர்பார்த்தது, படம் டீசண்டாக இருக்கிறது, என்று சொன்னால் போதும் என்பது தான். ஆனால், இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது, இதற்கு காரணம் பத்திரிகைகள் தான். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் படத்தை மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேத்து உங்களுக்கும், உங்கள் விமர்சனங்கள் மூலம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த மக்களுக்கும் நன்றி. நாங்கள் பல தியேட்டர்களுக்கு சென்று பார்த்தோம், அப்போது அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல்லாக இருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது. இரவுக் காட்சிகள் கூட அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது. குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்தார்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் படத்தை பார்த்தார்கள், இதற்கு காரணம் உங்களது தெளிவான விமர்சனம் தான், அதற்கு மிகப்பெரிய நன்றி.
படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில்,
“இந்த நிகழ்ச்சி பேச்சி படத்தின் வெற்றி விழாவாகவும், நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நடக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையிடப்பட்ட பேச்சி சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆனால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என்ற போதில் அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்னணி வேலைகள் தொடங்கிய போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி, அவரை நான் இப்போது தான் பார்க்கிறேன். படம் வெளியாகும் போது நிறைய தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ட்ரீம் வாரியர்ஸ் குகன் சார், இந்த படத்திற்கு இப்படி தான் போக வேண்டும் என்று மதிப்பீடு வைத்திருக்கிறார்கள், அந்த மதிப்பீடு மிக சரியாக இருந்தது. தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் இழப்பு வரக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டமாக எங்களை அழைத்துச் சென்றார்கள், அவர்களுக்கு நன்றி. படத்திற்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றிய சுரேஷ் மற்றும் தர்மா ஆகியோருக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், இதற்கு அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.