5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார்.வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த
‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில்
நடிகை தேவயானி பேசும் போது,
“முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன.என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனக்கும் அவனுக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது. நகுல் எங்கள் வீட்டுக் குட்டிப் பையன். அவன் எனக்குச் சின்னத்தம்பி.அவன் பல திறமைகள் உள்ளவன். நானே அவனுக்கு ஒரு விசிறி தான்.பாய்ஸ் படத்திற்குப் பிறகு அவனுடைய காதலில் விழுந்தேன் படத்தைப் பார்த்த போது அவனுக்குள் ஏற்பட்டிருந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. நகுல் நல்ல திறமையான நடிகன். முழுப் படத்தையும் தன் தோளில் தாங்கி சுமப்பவன். அவனுக்கு ஒரு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும்.நல்ல ஒரு கதைக்காக, நல்ல ஒரு இயக்குநருக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.எல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அந்த நல்ல நேரத்திற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன்.
விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசும்போது,
“இந்த படத்தின் தயாரிப்பாளர் பெயர் சுபாஸ்கரன், எடிட்டர் பெயர் தமிழ்குமரன். இந்த பெயர்கள் எனக்கு லைகாவை நினைவூட்டுகின்றன. அந்த லைகா நிறுவனம் போல் இவர்களும் வளர வேண்டும். நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.படத்தை இயக்கியுள்ள ஆர் ஜி கே தன்னம்பிக்கை உள்ள இளைஞன். ‘எ பிலிம் பை ஆர்ஜிகே ‘என்று போடும்போது யாரும் எதுவும் சொல்வார்களோ என்று நினைக்காமல் தைரியமாகப் போட்ட அந்தத் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். என்னிடம் வாஸ்கோடகாமா கதையைப் பற்றிச் சொல்லும் போது நல்லவர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள், கெட்டவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட ஒரு கதை என்றார். அதுவே எனக்குப் பிடித்து விட்டது. அவரிடம் எப்போதும் ஒரு தேடல் இருக்கும். படப்பிடிப்பில் அவர் அப்படித்தான் தனக்குத் தேவையானதைச் சமரசம் இல்லாமல் பெற்றுக் கொள்வார். இப்படிப்பட்ட நம்பிக்கைதான் ஒருவனுக்கு வெற்றியைத் தேடித் தரும்” என்று வாழ்த்தினார்.
நாயகன் நகுல் பேசும் போது,
“முதலில் இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நட்பு வட்டம் சிறியது தான். ஆனால் என்றும் நான் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் முன்பெல்லாம் நான் புலம்புவதுண்டு,சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.
இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது . இப்படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இயக்குநர் நம்பிக்கையை விடவில்லை .என்னை அவர் நம்பினார் ,அவரை நான் நம்பினேன் .தயாரிப்பாளர் எந்தக் குறையும் வைக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை என்னுடைய வழி, இதுதான் எனது கொள்கை. இப்படித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் . நான் என்னென்னவெல்லாமோ கற்பனை செய்தேன்.
நான் எப்போதும் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை எல்லாம் நல்ல நேரம் தான் என்று நினைக்கிறேன். நான் நினைத்துப் பார்க்கிறேன் அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் எப்போதும் என்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது. இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். இங்கே யாரும் பர்பெக்ட் கிடையாது. எல்லோரிடமும் குறைகள் உள்ளன. விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்.