எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது ! “யோலோ” திரைப்படத்தின் பூஜையில் இயக்குனர் அமீர்!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.

வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம்ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக, இப்படம் உருவாகிறது. இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் சாம் பேசியதாவது.
இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. ஃபிலிம் இன்ஸ்டிடியூட் முடித்த போது, முதலில் இயக்குநர் அமீர் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பின்னர், சமுத்திரகனி சார் எனக்குத் துணை இயக்குநர் வாய்ப்பு தந்தார். கீழ்படிய கற்றுக்கொள் வெற்றி தானாய் வந்து சேரும் என்று அமீர் சார் அலுவலகத்தில் இருக்கும், அதைக் கற்றுக்கொண்டேன். சமுத்திரகனி சார் எனக்கு அண்ணன், அப்பா மாதிரி தான். ரமணா சார் எனக்கு ஒரு மெண்டார். சுப்ரமணிய சிவா சார் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுனையாக இருக்கிறார். இந்த வாய்ப்பு எனக்கு மிக முக்கியமானது இந்த வாய்ப்பைத் தந்த மகேஷ் சாருக்கு நன்றி. இதனை சரியாகப் பயன்படுத்தி மிக அழகான படைப்பைத் தருவோம். ராம், என் 25 வருட நண்பர். அவருடையது தான் இந்தக்கதை. ஒரு டீமாக சேர்ந்து தான் இந்தப்படத்தை உருவாக்குகிறோம். உங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு நல்ல எண்டர்டெயினர் படத்தைத் தருவோம் நன்றி.


இயக்குநர் அமீர் பேசியதாவது…
ஒரு துவக்க விழா, இங்குள்ள பலருக்கு இது வழக்கமான விழா. ஆனால் சாமிற்கும் அவரது குழுவிற்கும் அவர்கள் வாழ்க்கையைத் துவக்கும் விழா. எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சனையில் நின்று போனது. 7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார். ஒரு திரைத் தலைமுறையே அவர் மூலமாகத்தான் வந்தது. அந்த ஆலமரம் தான் பல புதிய கிளைகளைத் தந்துள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு தான் இந்தப்படமும். எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது. அப்படித்தான் இன்று இங்கு மகேஷ் இருக்கிறார். சாம் செய்ய வேண்டியது ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டியது தான். இயக்குநர் சாமை என்னிடமிருந்து சமுத்திரகனி கூட்டிக்கொண்டு போய்விட்டான். நல்ல ஆட்களையெல்லாம் அவன் கூட்டிக்கொண்டு போய்விடுவான். சாமிற்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும். எங்கள் கிளையைப் பரப்ப சாம் வந்திருக்கிறான் என நம்புகிறேன். இந்தப்படம் பெரிய வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் நன்றி.